கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் தேர்தலுக்குப் பிறகு நிகழ்ந்துள்ள பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் மூன்று பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அம்மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிழக்கு இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியதுமே வன்முறை வெடித்தது. அங்கு பாஜகவின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் தனிப்பட்ட உதவியாளர் சந்த்ரோநாத் ரோத். பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனால் கோல்கத்தா உட்பட பல்வேறு நகரங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கு வங்கக் காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.
படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதல் நடத்தியவர்கள் நான்கு இருசக்கர வாகனங்களில் வந்ததாகவும், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், மத்யம்கிராம் பகுதியில் உள்ள தனது குடியிருப்புக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது, சந்த்ரோநாத் ரோத் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மாநிலக் காவல்துறை இயக்குநர் சித்திநாத் குப்தா தெரிவித்தார்.
காரை விட்டு வெளியேறுவதற்குள் சந்த்ரோநாத் ரோத் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கார் ஓட்டுநர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2011 முதல் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. இம்முறை அவரது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை பாஜக தோற்கடித்துள்ளது.
எனினும் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டிய மம்தா, தேர்தல் முடிவுகளைத் தம்மால் ஏற்க இயலாது எனத் திட்டவட்டமாக அறிவித்திருப்பதுடன், சட்ட நடவடிக்கையையும் கையில் எடுத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், மேற்கு வங்கத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளர்களில் ஒருவராகக் கருதப்படும் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறைத் தலைவர் சித்திநாத் குப்தா புதன்கிழமை (மே 7) தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் வன்முறையை எதிர்கொள்வது மேற்கு வங்க மக்களுக்கு ஒன்றும் புதிதன்று. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. அப்போது நிகழ்ந்த மோதல்களின்போது 12 பேர் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

