கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஐந்து பேர் கைதாகினர்.
இதனால் ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள், சனிக்கிழமை (மே 30) ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சாண்டிதலா காவல் நிலையத்துக்கு வெளியே திரிணாமூல் காங்கிரசின் மேலும் ஒரு மக்களவை உறுப்பினரான கல்யாண் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது.
முன்னதாக, தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைச் சம்பவங்கள் காரணமாக, மாநிலம் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தாக்கப்படுவதாக அக்கட்சி எம்.பி. அபிஷேக் பானர்ஜி குற்றஞ்சாட்டியிருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்கச் சென்றபோது, அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தன்னைக் கொலை செய்ய பாஜகவினர் முயன்றதாகவும் திருடன், திருடன் என்று முழக்கமிட்டவர், தன்னுடன் சிலர் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
பலர் கற்களையும் முட்டைகளையும் வீசி, தகாத வார்த்தைகளால் தாக்கினர். எனவே, தாம் தலைக்கவசம் அணிந்து தப்பிக்க வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (மே 31) தெரிவித்தது.
இதனிடையே, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த மக்களவை உறுப்பினர் கல்யாண் பானர்ஜி மீது தாக்குதல் நடந்துள்ளது.
கைது செய்யப்பட்ட தங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விடுவிக்கக் கோரி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் மனு அளிக்க ஞாயிற்றுக்கிழமை (மே 31) கல்யாண் பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். அப்போது அங்கு பாஜகவினர் பலர் திரளாகத் திரண்டதாகவும் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இம்மோதலில் கல்யாண் பானர்ஜி தாக்கப்பட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. அறவழிப் போராட்டம் என்ற ஜனநாயக ரீதியிலான எங்கள் உரிமை மறுக்கப்பட்டுள்ளது,” என்று அவர் குற்றஞ்சாட்டினார்.

