புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வியட்னாம் பயணத்தால் புது சர்ச்சை வெடித்துள்ளது. ராகுல் காந்தி ஏன் அடிக்கடி வியட்நாம் செல்கிறார் என பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உயிரிழந்ததற்காக நாடே துயரத்தில் இருந்தபோது, ராகுல் காந்தி புத்தாண்டைக் கொண்டாட வியட்னாம் சென்றிருந்ததாக அண்மையில் பாஜக பிரமுகர் அமித் மாளவியா விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி மீண்டும் வியட்னாம் சென்றுள்ளதாகவும் அவர் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்திற்காக அங்கு சென்றதாகவும் கூறப்படுகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ள அவரது இந்தப் பயணம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், ராகுல் காந்தி தனது தொகுதியைவிட வியட்னாமில்தான் அதிக நேரத்தைச் செலவிடுவதாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
வியட்னாம் மீதான பாசம் குறித்து ராகுல் காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது வலியுறுத்தினார்.
இதுபோல பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பதவியில் உள்ள ராகுல் காந்தி, ரகசியமாக அடிக்கடி வெளிநாட்டுக்கு பயணம் செய்கிறார். குறிப்பாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் அவரது பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது,” எனப் பதிவிட்டுள்ளார்.