திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியான சாரதா முரளிதரன், தனது கணவர் வேணுவைத் தொடர்ந்து தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் கேரளத் தலைமைச் செயலராக இருந்த வேணுவின் பதவிக்காலம் நிறைவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதை அடுத்து அந்தப் பொறுப்பை அவரது மனைவி சாரதா முரளிதரன் ஏற்றுக் கொண்டார். கடந்த மாதம் இது குறித்த தகவலை கேரள அரசு வெளியிட்டது. இதற்கு முன்பு திட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் கூடுதல் தலைமைச் செயலராக அவர் பணியாற்றியுள்ளார். அவர்கள் இருவரும் 1990ஆம் ஆண்டு ஐஏஎஸ் குழு அதிகாரிகள்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். “இந்தியாவில் முதல் முறையாக (அனைவரும் அறிந்த வரை) கேரள மாநில தலைமைச் செயலர் வேணு, ஓய்வு பெறுவதை அடுத்து தனது பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்தார். கேரள மாநில தலைமைச் செயலகத்தில் இது முறைப்படி நடந்தது. மூத்த ஊழியர் எனற அடிப்படையில் இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது,” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அதன் காணொளியையும் அதில் சேர்த்துள்ளார். கணவன் - மனைவி அடுத்தடுத்து கேரளத் தலைமைச் செயலர் பொறுப்பைக் கவனிப்பதை அம்மாநில முதல்வர் பினராயி விஜயனும் குறிப்பிட்டுள்ளார்.
“அவர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் நான் இன்னும் 8 மாத காலம் பணியாற்ற வேண்டி உள்ளது. நாங்கள் இருவரும் சிவில் பணியில் 34 ஆண்டுகள் இணைந்தே பணியாற்றினோம்,” என சாரதா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

