காட்டு யானைகள் அட்டகாசம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட அறுவர் உயிரிழப்பு

காட்டு யானைகள் அட்டகாசம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட அறுவர் உயிரிழப்பு

2 mins read
601c6e2f-5f8b-4a96-94a5-4ff73c025624
காட்டு யானைகள் அட்டகாசத்தால் ஆறு பேர் உயிரிழந்தனர். - படம்: பிக்சாபே

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ஹசாரிபாக் மாவட்டத்தில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் கூட்டமாகத் தாக்கியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

அம்மாவட்டத்தின் சர்சூ பகுதியில் உள்ள கொண்ட்வார் கிராமத்துக்குள் நள்ளிரவு நேரத்தில் காட்டு யானைக் கூட்டம் ஒன்று புகுந்தது.

மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) அதிகாலையில் வீடுகளைச் சூறையாடிய யானைகள் கண்ணில்பட்டவர்களைத் தாக்கியுள்ளன.

இந்தத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஒரு பச்சிளம் குழந்தை பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில், ஒரு குழந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

கடந்த சில நாள்களாகவே இந்த யானைக் கூட்டம் போகாரோ, ராம்கர் மற்றும் ஹசாரிபாக் ஆகிய வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் முகாமிட்டு தொந்தரவு செய்து வருகிறது.

ஏற்கெனவே அப்பகுதிகளில் யானை தாக்கி உயிரிழப்புகள் நேர்ந்துள்ள நிலையில், தற்போது ஒரே நாளில் ஆறு பேர் பலியானது கிராம மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் அவை குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கவும் வனத்துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், யானைக் கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்