பாட்னா: எதிர்வரும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், அண்மைய கருத்துக்கணிப்புகள் அவரது செல்வாக்கு அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கின்றன.
தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து ஜன் சுராஜ் என்ற கட்சியைத் துவக்கியுள்ள பிரசாந்த் கிஷோர், பீகாரில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசியக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும், இப்போதே அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், பீகார் முதல்வராக நிதிஷ் குமார் பதவி வகிப்பது இதுவே கடைசியாக இருக்கும் என்றார்.
“வரும் தேர்தலில் நிதிஷ்குமார் 25 இடங்களுக்கு மேல் வென்றால், நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன்.
“கடந்த 20 ஆண்டுகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியையும் அதற்கு முன், 15 ஆண்டுகள் லாலு பிரசாத் யாதவின் ஆட்சியையும் பார்த்த பீகார் மக்கள், தற்போது நம்பகமான மாற்று சக்தியை எதிர்பார்க்கின்றனர்.
“அந்த மாற்று சக்தியாக நாங்கள் இருப்போம். நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவோம்,” என்றார் பிரசாந்த் கிஷோர்.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியின் ஊழலைவிட, பாஜக கூட்டணி அதிகமாக ஊழல் செய்துள்ளது என்றும், அந்த ஊழலை தாம் அம்பலப்படுத்துவது உறுதி என்றும் அவர் மேலும் கூறினார்.
“பண விவகாரங்களில் நான் மிகவும் வெளிப்படையானவன். மூன்று ஆண்டுகளில் வியூக வகுப்பாளராக, 241 கோடி ரூபாய் ஈட்டினேன். இதற்கு வரி கட்டி உள்ளேன்.
“இந்த விபரங்கள் வருமான வரித் துறையின் இணையத்தளத்தில் உள்ளன. எனவே, என்னை யாரும் குறைகூற முடியாது,” என்றார் பிரசாந்த் கிஷோர்.