பஹ்ரைச்: உத்தரப் பிரதேசத்தில் ஓநாய் கடித்து மேலும் ஒரு குழந்தை உயிரிழந்துவிட்டது. பஹ்ரைச் மாவட்டத்தில் திங்கட்கிழமை அதிகாலை (செப்டம்பர் 2) கிராமத்திற்குள் புகுந்த ஓநாய்கள், மூவரைத் தாக்கியதுடன் தாயுடன் தூங்கி கொண்டு இருந்த 2 வயது மதிக்கத்தக்க குழந்தையை கடித்துக் கொன்றுள்ளன. பஹ்ரைச் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் நள்ளிரவு ஓநாய்கள் ஊருக்குள் புகுந்து மனிதர்களை கொன்று வேட்டையாடுவது அதிகரித்து வருகிறது. இதுவரை 8 சிறுவர்கள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
“என்னுடைய ஆறு மாத குழந்தையின் அழுகுரலைக் கேட்டு விழித்தபோது, எனது இரண்டு வயது மகளை ஓநாய்கள் இழுத்துச் சென்றதை அறிந்தேன். நாங்கள் கூலித் தொழிலாளிகள். எங்கள் வீட்டில் கதவு கூட இல்லை. அதனால்தான் இந்தச் சம்பவம் நடந்தது. எனது மகளின் இரண்டு கைகளையும் ஓநாய் கடித்திருந்தது,” என உயிரிழந்த சிறுமியின் தாயார் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த பகுதியில் இதற்கு முன்பு பலமுறை ஓநாய்களின் நடமாட்டத்தை அங்குள்ள மக்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறையில் தெரிவித்தபோது காணொளி ஆதாரம் கேட்டுள்ளனர். தங்களது கைப்பேசியை எடுப்பதற்குள் ஓநாய்கள் மாயமாகி விடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். வனத்துறையின் அலட்சியம் காரணமாக ஒரு பிஞ்சுச் குழைந்தையின் உயிர் தங்கள் பகுதியில் பறிபோயுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை வசம் எதுவும் இல்லை. ஓநாய் குறித்து புகார் கொடுத்தால் கூட மிகவும் தாமதமாகவே அவர்கள் வருகின்றனர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு கொடுத்துள்ளதாகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் இரவு நேரத்தில் வீட்டுக்குள் தூங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் மாவட்ட நீதிபதி மோனிகா ராணி தெரிவித்துள்ளார். மக்களை அச்சுறுத்தி வரும் ஓநாய்களைப் பிடிப்பதற்காக வனத்துறை ‘ஆபரேஷன் பேடியா’ என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதுவரை 4 ஓநாய்களைப் பிடித்துள்ளதாகவும் மேலும், 2 ஓநாய்களைப் பிடிக்க முயன்று வருவதாகவும் கூறப்பட்டது.
“இந்த விவகாரத்தில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். காவல்துறை, வனத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சி நிர்வாகிகள் என அனைத்துத் துறைகளும் இதில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்,” என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
ஆட்கொல்லி ஓநாய்கள் தாக்குதலுக்கு உள்ளான இடங்களுக்கு கூடுதல் அதிகாரிகளை அனுப்பும்படி, வனத்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.