ரூ.2,000க்காக 27 தங்கக்கட்டிகளை இந்தியாவுக்குக் கடத்தியவர் கைது

1 mins read
4aa1c7cb-eb4a-44ad-8e4a-e980fd33f5a5
தாம் தங்கம் கடத்தியது இதுவே முதன்முறை என்று அந்த மாது ஒப்புக்கொண்டார். படம்: இந்திய ஊடகம் -

பங்ளாதேஷிலிருந்து இந்தியாவுக்கு 27 தங்கக்கட்டிகளைக் கடத்த முயன்ற மாது கைது செய்யப்பட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளின் எடை 2 கிலோவுக்கு மேல். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.1.29 கோடி.

மனிதார் தார் என அடையாளம் காணப்பட்ட அந்த 34 வயது மாது, அந்தத் தங்கக்கட்டிகளைத் துணியில் மடித்து வைத்து தமது இடுப்பைச் சுற்றிக் கட்டி வைத்திருந்தார். பங்ளாதேஷின் சிட்டகோங் மாவட்டத்தை அவர் சேர்ந்தவர்.

இந்தியச் சோதனைச்சாவடியில் பணியமர்த்தப்பட்டிருந்த எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மகளிர் அதிகாரிகளுக்கு, தங்கக்கடத்தல் குறித்து தகவல் கிடைத்தது.

மேற்கு வங்க மாநிலம், நார்த் 24 பர்கனாஸ் மாவட்டத்தில் அந்த மாது பிடிபட்டார்.

அடையாளம் தெரியாத ஒருவரிடம் அந்தத் தங்கக்கட்டிகளை ஒப்படைக்க தாம் பணிக்கப்பட்டிருந்ததாக விசாரணையின்போது அந்த மாது கூறினார்.

தாம் தங்கம் கடத்தியது இதுவே முதன்முறை என்று கூறிய அவர், பணியை முடித்தால் தமக்கு ரூ.2,000 வழங்கப்படும் என்றார்.