குடும்பத்தை நடத்த முடியாமல் மிகவும் சிரமத்தில் இருந்தார் பாலக்காட்டைச் சேர்ந்த 46 வயது சுபத்ரா. கணவர் ஆகஸ்ட் மாதத்தில் இறந்துவிட்டார். மூன்று பிள்ளைகளில் ஒருவருக்கு பெருமூளை வாதம்.
வீட்டில் இருந்து அவரைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் வெளியே சென்று வேலைக்குப் போக முடியாத நிலை.
பிள்ளைகளுக்கு உணவுகூட முடியாமல் தவித்த சுபத்ரா, வேறு வழியே இல்லாமல் தமது மகனின் ஆசிரியரிடம் 500 ரூபாயை உதவியாகக் கேட்டார்.
உடனேயே ஆயிரம் ரூபாயைக் கொடுத்த ஆசிரியர் கிரிஜா ஹரிக்குமார், சுபத்ராவை அவர் வீட்டில் சென்று பார்த்தார்.
மழை வந்தால் ஒழுகும் வீடு. குடும்பம் வறுமைநிலையில் வாடுவது அவருக்குப் புரிந்தது.
அக்குடும்பம் பற்றி தமது சமூக ஊடகக் கணக்கில் அன்று பதிவிட்ட கிரிஜா அவர்களின் சார்பில் நன்கொடைகளைக் கேட்டார். சுபத்ராவின் வங்கிக் கணக்கு விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
சுபத்ரா இதைச் செய்தது வெள்ளிக்கிழமை அன்று. வெறும் 48 மணி நேரத்தில், காத்திருந்தது மனதுக்கு நிறைவான நல்ல செய்தி.
ஞாயிற்றுக்கிழமை அன்று, மொத்தம் 51 லட்சம் ரூபாய் பணம் சுபத்ராவின் வங்கிக் கணக்கில் சேர்ந்திருந்தது.
தமது கோரிக்கைக்கு செவிசாய்த்து சுபத்ராவின் குடும்பத்தைக் கைத்தூக்கிவிட்டவர்களுக்கு கிரிஜா நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கிடைத்த நன்கொடையைக் கொண்டு, சுபத்ராவின் கணவர் இறப்பதற்கு முன்னர் கட்டத் தொடங்கிய வீட்டை கட்டி முடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
எஞ்சியுள்ள பணத்தைக் கொண்டு வீட்டுச் செலவுகளைச் சமாளிக்க அவர்கள் எண்ணியுள்ளனர்.

