அகமதாபாத்: தெருநாய் ஒன்று ஆடவரைக் கடித்த நிலையில், அதற்கு உணவளித்தவர் அந்த ஆடவரின் தாயைக் கடித்தார். இச்சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்தது.
கேடா மாவட்டம், கம்லா எனும் சிற்றூரைச் சேர்ந்தவர் சீதா ஜாலா. ஓராண்டிற்குமுன் இவரின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு யக்னேஷ், 26, மற்றும் பிரகாஷ், 22, என இரண்டு மகன்கள் உள்ளனர்.
பத்து நாள்களுக்குமுன் பிரகாஷை ஒரு தெருநாய் கடித்துவிட்டது. அதற்காக அவர் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று மாலை அதே ஊரைச் சேர்ந்த ராவல் என்பவர் அதே தெருநாய்க்கு உணவளித்ததைக் கண்டார் சீதா. இதனையடுத்து, ராவலிடம் சென்ற சீதா, அந்த நாய் தன் மகனைக் கடித்துவிட்டதால் அதற்கு உணவிட வேண்டாம் என்று கூறினார்.
ஆனால், அதற்குச் செவிமடுக்காத ராவல், தம்மை வசைபாடியதாக சீதா சொன்னார். அருகில் நின்றிருந்த ராவலின் கணவர் கம்லேஷ் தம்மைக் கட்டையால் அடித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
"அடியிலிருந்து தப்பிக்க அவர்களின் கையைப் பிடித்து நிறுத்த முயன்றபோது, ராவல் எனது கட்டைவிரலை வலுவாகக் கடித்தார். இதனால் ரத்தம் சொட்டியதுடன் நானும் விழுந்துவிட்டேன். நான் மயக்கமடையும்வரை கணவனும் மனைவியும் என்னை அடித்து உதைத்தனர்," என்று விளக்கினார் சீதா.
இந்தச் சண்டை குறித்து தகவல் கிடைத்ததும் தாயைக் காப்பாற்ற விரைந்தோடினார் யக்னேஷ். அப்போது, ராவல் தம்பதி, தன் தாயைக் கொன்றுவிடுவதாக மிரட்டினர் என்று அவர் சொன்னார்.
பல காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் சீதா. அவரது மண்டையோடு உடைந்து, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இதனையடுத்து, காவல்துறை வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகிவிட்ட ராவல் தம்பதியைத் தேடி வருகிறது.


