வில்லன் வேடத்தில் நடித்ததால் நடிகரைத் தாக்கிய பெண் (காணொளி)

1 mins read
22bad1de-18a4-4ef9-916e-00b3cf76c1c3
மேடைக்குப் பாய்ந்து வந்து நடிகர் என்.டி. ராமசாமியைத் தாக்கிய பெண். - காணொளிப்படம்: எக்ஸ்/@gharkekalesh

ஹைதராபாத்: இந்தியாவில் சில நேரங்களில் திரைப்படக் கதாபாத்திரங்களையும் ரசிகர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்வதுண்டு.

அத்தகைய ஒரு பெண் ரசிகரால் தாக்குதலுக்கு ஆளானார் தெலுங்கு நடிகர் என்.டி. ராமசாமி.

அவர் வில்லன் வேடம் ஏற்றிருந்த ‘லவ் ரெட்டி’ என்ற திரைப்படம் இம்மாதம் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியீடு கண்டது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் பார்வையாளர்களுடன் சேர்ந்து அப்படத்தில் நடித்தவர்களும் படத்தைப் பார்த்தனர்.

பின்னர் நடிகர்கள் அனைவரும் மேடையேறி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அப்போது, பார்வையாளர்கள் பகுதியிலிருந்து திடீரென மேடையில் பாய்ந்த பெண் ஒருவர், என்.டி. ராமசாமியை அடிக்கத் தொடங்கினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக நடிகர்கள், அவரை அப்பெண்ணிடம் இருந்து மீட்டனர். “இது வெறும் திரைப்படந்தான்,” என்று கூறி, அங்கிருந்து அப்பெண்ணை அப்புறப்படுத்தினர்.

நடிகர் ராமசாமி ஒரு கல்லால் தன் தலையில் தாக்கிய பின்னர் அதனை தன் மகளாக நடித்தவர் எறியும்படியான ஒரு காட்சி ‘லவ் ரெட்டி’ படத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பரவ, இணையவாசிகள் பலரும் பலவிதமாகக் கருத்துரைத்து வருகின்றனர்.

“சினிமா இருக்கும்வரை மக்களில் சிலருக்கு இப்படி பைத்தியம் பிடித்துக்கொண்டுதான் இருக்கும்,” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர், “நல்ல வேளையாக அப்பெண்ணும் கல்லால் அடிக்கவில்லை,” எனக் கூறியுள்ளார்.

வேறு சிலர், படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படக்குழுவினரே அரங்கேற்றிய நாடகம் இது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்