தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கன்னித்தன்மைப் பரிசோதனைக்குப் பெண்ணைக் கட்டாயப்படுத்த முடியாது: நீதிமன்றம் அதிரடி

2 mins read
c8f9bd07-45a1-4d8f-9c15-76db31f518e2
ஆடவரின் கோரிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமன்றி, அது பெண்ணின் மாண்பையும் கண்ணியத்தையும் மீறுவதுமாகும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். - மாதிரிப்படம்: பிக்சாபே

பிலாஸ்பூர்: மருத்துவப் பரிசோதனை மூலம் கன்னித்தன்மையை மெய்ப்பிக்கும்படி ஒரு பெண்ணைக் கட்டாயப்படுத்த முடியாது என்று இந்தியாவின் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அவ்வாறு கட்டாயப்படுத்துவது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21வது சட்டப்பிரிவின்படி, பெண்ணின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

தம் மனைவியைக் கன்னித்தன்மைப் பரிசோதனை செய்துகொள்ள உத்தரவிடக் கோரி ஆடவர் ஒருவர் உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், நீதிபதி அரவிந்த் குமார் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இன்னோர் ஆடவருடன் தம் மனைவிக்குக் கள்ளத்தொடர்பு உள்ளது எனத் தமது மனுவில் அந்த ஆடவர் குறிப்பிட்டிருந்தார். கன்னித்தன்மைச் சோதனை தொடர்பான தமது கோரிக்கையை கீழ்நீதிமன்றம் ஏற்காத நிலையில், அவர் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை அணுகினார்.

முன்னதாக, அந்த ஆடவருக்கு ஆண்மைக் குறைபாடு உள்ளதாகக் கூறி, அவருடன் சேர்ந்து வாழ அவருடைய மனைவி மறுத்திருந்தார்.

இந்நிலையில், அந்த ஆடவரின் கோரிக்கை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமன்றி, அது பெண்ணின் மாண்பையும் கண்ணியத்தையும் மீறுவதுமாகும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

தனிமனிதச் சுதந்திர உரிமையை வலியுறுத்தும் 21வது சட்டப்பிரிவை எத்தகைய சூழலிலும் மாற்ற முடியாது என்றும் அவர் சொன்னார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் அவ்விணையர்க்குத் திருமணமானது. தனக்கு வாழ்க்கைப்படியாக மாதம் ரூ.20,000 வழங்கும்படி தன் கணவருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி அப்பெண் நீதிமன்றத்தை நாடினார். பதிலுக்கு, தங்களது திருமண வாழ்க்கை நிறைவானதாக இல்லை எனக் கூறி, தன் மனைவியைக் கன்னித்தன்மைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவருடைய கணவர் கோரிக்கை விடுத்தார்.

ஆயினும், கடந்த 2024 அக்டோபரில் அந்த ஆடவரின் கோரிக்கையை ராய்ப்பூர் குடும்ப நீதிமன்றம் ஏற்காததை அடுத்து, அவர் உயர் நீதிமன்றத்தில் தன் மனைவிமீது குற்றவியல் வழக்கு தொடுத்தார்.

குறிப்புச் சொற்கள்