பேருந்தில் கட்டணம் தர மறுத்த பெண் காவலர்: ராஜஸ்தான், ஹரியானா காவல்துறையினர் மாறி, மாறி அபராதம்

2 mins read
3327de8c-bc38-4017-a06d-713860e75a8b
இச்சம்பவம் பற்றி அறிந்த ஹரியானா போக்குவரத்துக் காவல்துறையினர், இதனை ஒரு அவமானமாகக் கருதி, தர்ஹரா வந்த சுமார் 90 ராஜஸ்தான் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பினர். - படங்கள்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஹரியானா பெண் காவலர் பயணச்சீட்டு வாங்க மறுத்த விவகாரம் இரு மாநில போக்குவரத்துக் காவல்துறையினருக்கு இடையிலான மோதலாக உருவெடுத்துள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி அபராதம் விதித்து வருகின்றனர்.

கடந்த 22ஆம் தேதி ராஜஸ்தான் அரசுப் பேருந்தில் ஹரியானா பெண் காவலர் ஒருவர் பயணம் செய்துள்ளார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து ஹரியானாவின் தர்ஹரா செல்ல அக்காவலரிடம் நடத்துநர் ரூ.50 பயணக் கட்டணம் கேட்டுள்ளார். ஆனால் அரசு ஊழியர் என்று கூறி பெண் காவலர் பயணச்சீட்டை வாங்க மறுத்துள்ளார்.

இதற்கு நடத்துநர், ராஜஸ்தானில் அரசு ஊழியர்களுக்கு இலவசப் பயணம் இல்லை என தெளிவுபடுத்தி உள்ளார். இதன் பிறகும் பெண் காவலர் பயணச்சீட்டை வாங்க மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அது மோதலாக உருவெடுத்தது. பயணிகள் கூறியும் பெண் காவலர் பயணச்சீட்டு வாங்கவில்லை, பேருந்தை விட்டு இறங்கவும் இல்லை. இறுதியில் பெண் காவலருக்காக பயணி ஒருவர் ரூ.50 கொடுத்து பயணச்சீட்டு வாங்கியதால் சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்து அங்கிருந்து புறப்பட்டது.

இதுபற்றி அறிந்த ஹரியானா போக்குவரத்துக் காவல்துறையினர், இதனை ஒரு அவமானமாகக் கருதினர். இதனால் தர்ஹரா வந்த சுமார் 90 ராஜஸ்தான் அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதித்து ரசீது அனுப்பினர். இதற்கு ஏதாவது ஒரு விதிமீறல் காரணமும் காட்டியிருந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜஸ்தான் போக்குவரத்துக் காவல்துறையினர் தங்கள் மாநிலத்துக்கு வந்த 100க்கும் மேற்பட்ட ஹரியானா அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதித்ததுடன் 8 பேருந்துகளை காவல் நிலையங்களில் நிறுத்தி வைத்தனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் புருஷோத்தம் சர்மா கூறும்போது, “பெண் காவலர் வாக்குவாதம் நடந்த மறுநாளில் இருந்து எங்கள் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எங்கள் நடத்துநர் மீது எந்தத் தவறும் இல்லை என ஹரியானா அரசிடம் கூறிவிட்டோம். இதை எழுத்துபூர்வமாகவும் அனுப்ப உள்ளோம்,” என்றார்.

இரு மாநில போக்குவரத்துக் காவல்துறையினரின் இந்த மோதல் ஊடகங்களில் வெளியானது. இதற்குக் காரணமான பெண் காவலர் - நடத்துநர் வாக்குவாதத்தின் வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் இந்தப் பிரச்சினையில் இரு மாநில உயரதிகாரிகள் தலையிட வேண்டியதாயிற்று. இரு மாநிலங்களிலும் ஆட்சி செய்வது பாஜக என்பதால் அதன் முதல்வர்கள் இப்பிரச்சினையை பேசித் தீர்க்க இருப்பதாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்