சிகிச்சை அளித்த பெண் மருத்துவரைக் குத்திக் கொன்ற சிறைக்கைதி

1 mins read
916b210a-a65f-4447-8764-ac1f912263b4
இறந்தவர், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் வந்தனா தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு வயது 23. படம்: ஃபேஸ்புக் -

இந்தியாவின் கேரள மாநிலம், கொட்டாரக்கரையில் பெண் மருத்துவர் ஒருவர் புதன்கிழமை (மே 10) அதிகாலை நோயாளியால் குத்திக் கொல்லப்பட்டார்.

சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட சிறைக்கைதி ஒருவன் அந்த மருத்துவரைக் கத்திரிக்கோலால் குத்திக் கொன்றான்.

இறந்தவர், கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் வந்தனா தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருக்கு வயது 23.

குற்றஞ்சாட்டப்பட்ட சந்தீப், 42, எனும் அந்த ஆடவன், பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தான். தமது வீட்டிற்கு அருகே சிலருடன் தகராற்றில் ஈடுபட்டதில் அவன் காயமடைந்தான்.

புதன்கிழமை காலை 4.30 மணிக்கு கொட்டாரக்கரை மருத்துவமனைக்கு சந்தீப் கொண்டுசெல்லப்பட்டான். அவனுக்கு ஏற்பட்ட காயத்திற்கு மருத்துவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோது, அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்திரிக்கோலை எடுத்து மருத்துவரை சந்தீப் குத்தினான்.

இந்தச் சம்பவத்தில் காவல்துறை அதிகாரிகள் உட்பட ஐவருக்குக் காயம் ஏற்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அந்த மருத்துவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்திய மருத்துவச் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.