ஆக்ரா: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அலிகாரில் 40 வயதுப் பெண் ஒருவர், தம் மகளின் 20 வயதுக் காதலருடன் ஓடிப்போனதாகக் கூறப்படுகிறது.
அவரின் மகளுக்குத் திருமணமாக வெறும் ஒன்பது நாள்களே இருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஓடிப்போன அவ்விருவரும் ரூ.2.5 லட்சம் பணத்தையும் நகைகளையும் எடுத்துச் சென்றதாகக் குற்றஞ்சாட்டப்படுவதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 8) தெரிவித்தது.
அப்பெண்ணின் மகளுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி நடக்கவிருந்த திருமணத்தை முன்னிட்டு, ஏற்பாட்டுப் பணிகள் முழுவீச்சுடன் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், திருமண ஆடை வாங்கப்போவதாக கூறி மணமகன் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிலிருந்து புறப்பட்டார்.
பிறகு தம் தந்தையைக் கைப்பேசியில் அழைத்த அவர், “நான் புறப்படுகிறேன். என்னைத் தேட வேண்டாம்,” என்று சொல்லிவிட்டார்.
அதே தறுவாயில் மணமகளின் தாயாரும் எந்தத் தகவலும் சொல்லாமல் மாயமானார். அவ்விருவரும் தப்பியோடியதைக் காவல்துறை விசாரணை உறுதிப்படுத்தியது.
“அப்பெண்ணின் கணவர் முறைப்படி புகார் அளித்துள்ளார். இரு குடும்பத்தாரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்ட நாங்கள், விசாரணையைத் தொடங்கியுள்ளோம். தப்பியோடியவர்களைத் தேடிப் பிடிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன,” என்றார் காவல்துறை அதிகாரி அர்விந்த் குமார்.
ஓடிப்போன ஆடவர் உத்தராகண்ட்டில் தலைமறைவாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அங்குதான் அவர் வேலை செய்வதாக நம்பப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
“தேடுதல் குழு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தங்களிலும் ரயில்வே நிலையங்களிலும் உள்ள கண்காணிப்புக் கருவிகளில் பதிவான காட்சிகள் சோதிக்கப்பட்டு வருகின்றன,” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணமகளின் வீட்டிற்கு மணமகன் அடிக்கடி சென்று வந்ததாக அந்த 40 வயதுப் பெண்ணின் உறவினர் ஒருவர் கூறினார். தம் வருங்கால மாமியாருக்கு ஒருமுறை கைப்பேசியை அந்த இளையர் அன்பளிப்பாக வழங்கினார்.
இருவரும் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தனர். ஆனால், கடைசியில் அவர்கள் ஓடிப்போவர் என எவரும் எதிர்பார்க்கவில்லை.

