பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி; திருப்பி எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை

பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.10 கோடி; திருப்பி எடுத்துக்கொள்ளும்படி கோரிக்கை

1 mins read
80ad0124-35ee-4725-a674-d7909868c213
சீதா என்ற இப்பெண்ணின் வங்கிக் கணக்கில் கிட்டத்தட்ட பத்துக் கோடி ரூபாய் இருப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது. - படங்கள்: இந்தியா டுடே

லக்னோ: ஏடிஎம் இயந்திரம் வழியாக தமது வங்கிக் கணக்கு இருப்பிலுள்ள பணத்தைச் சரிபார்த்த பெண், தமது கணக்கில் பத்துக் கோடி ரூபாய் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மைன்புரி மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

சீதா என்ற அப்பெண், அங்குள்ள பேங்க் ஆஃப் இந்தியா கிளை ஒன்றில் கணக்கு வைத்துள்ளார். அவரது கணக்கில் திடீரென ரூ.9,99,49,586 வரவு வைக்கப்பட்டு இருந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

“என் அம்மாவின் வங்கிக் கணக்கைப் பார்த்தபோது அதில் பத்துக் கோடி ரூபாய் இருப்பதைக் கண்டேன். அது யாருடைய பணம் என்று எங்களுக்குத் தெரியாது,” என்று சீதாவின் மகன் அருண் குமார் கூறினார்.

வங்கிக் கிளைக்கு நேரில் சென்று, வங்கி அலுவலர்களிடம் இதுபற்றித் தெரிவிக்க இருப்பதாகவும் அவர் சொன்னார்.

அவ்வளவு பணம் தமது கணக்கிற்கு எப்படி வந்தது எனத் தெரியாது என்ற சீதா, அது யாருடையதாக இருந்தாலும் அதனை அவர் திருப்பி எடுத்துக்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

அவருடைய கணவர் ஃபர்ஸானும் அவ்வாறே சொன்னார்.

தாங்கள் வேளாண்மை செய்து பிழைத்து வருவதாகக் கூறிய ஃபர்ஸான், வங்கி திறந்ததும் நேரில் சென்று அப்பணத்தை ஒப்படைக்க இருப்பதாகவும் சொன்னார்.

சீதாவின் வங்கிக் கணக்கில் பத்துக் கோடி ரூபாய் இருப்பதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில், தொழில்நுட்பக் கோளாற்றால் இத்தவறு நேர்ந்திருக்கலாம் என்று சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை அலுவலர்கள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்