மின்கட்டணம் செலுத்தாத மூதாட்டி அரை நிர்வாணமாக ஓடிய அவலம்

1 mins read
4750eb1d-3bf1-46d8-8ff2-3b9730ffc0ca
மின்வாரிய ஊழியர்களை அரை நிர்வாணத்தில் பின்தொடர்ந்து செல்லும் மூதாட்டி. படம்: டுவிட்டர் காணொளி -

மின்கட்டணம் செலுத்தாததால் மூதாட்டி ஒருவரை அரை நிர்வாணமாக பொதுவெளியில் மின்வாரிய ஊழியர்கள் ஓடவிட்ட சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், சாகர் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

இதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

அந்த மூதாட்டி ரூ.19,000 மின்கட்டணம் செலுத்தாததால், மின்வாரிய ஊழியர்கள் அவரது வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கட்டில், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மின்வாரிய ஊழியர்கள் வீட்டிற்கு வந்தபோது மூதாட்டி குளியலறையில் இருந்தார். ஆனால், அவர்கள் விடாப்பிடியாக வீட்டிலிருந்த பொருள்களை எடுத்துச் சென்றதால் அரை நிர்வாணமாக அந்த மூதாட்டி அவர்களைப் பின்தொடர்ந்து செல்லும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டார்.

சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள்மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள மாநில மின்சாரத்துறை அமைச்சர் பிரதுமான் சிங் தோமர் உத்தரவிட்டிருக்கிறார்.

சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

மூதாட்டியை அவருடைய மகனும் மருமகளும் தனித்து விட்டதால் அவர் தனியாக வசித்து வருகிறார். அவர் தங்கியுள்ள வீட்டின் மின்சார இணைப்பு மருமகளின் பெயரில் இருந்தது மூதாட்டிக்கு தெரியவில்லை.

ஆகையால் பறிமுதல் செய்யப்பட்ட மூதாட்டியின் பொருள்கள் அனைத்தும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக மின்வாரியத்துறை அதிகாரி மந்தீப் திமாஹா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இதே மாநிலத்தில் ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான குடிநீர் வரியைச் செலுத்தாததால் பால் வணிகர் ஒருவரது எருமை மாட்டை நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருந்தனர்.