பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்ப ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்

1 mins read
df0c9fb7-23ab-4ed9-a63d-fb81e3a2260d
ரயில் மெதுவாகச் சென்றதால் பெண்ணின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்புவதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த 23 வயது பெண் ஒருவர் படுகாயமடைந்தாா்.

தெலுங்கானா மாநில ஹைதராபாத்தில் அந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மார்ச் 22ஆம் தேதி மாலை செகந்திராபாதில் இருந்து மெட்சல் பகுதிக்கு புறநகா் மின்சார ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் அந்த இளம்பெண் பயணம் செய்தார். அப்போது 25 வயது ஆடவர் ஒருவர், அந்தப் பெட்டியில் ஏறினாா்.

ரயில் புறப்பட்டதும் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க அவர் முயன்றார். இதையடுத்து, அந்த நபரிடம் இருந்து தப்பிப்பதற்காக ரயில் பெட்டிக்குள் அங்கும் இங்கும் அப்பெண் ஓடினாா். எனினும், அந்த நபா் தொடா்ந்து விரட்டியதால் தப்புவதற்காக இளம்பெண் ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தாா்.

அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு பிற பெட்டிகளில் இருந்த பயணிகள் ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு தலை, முகம், வலது கை, இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். அவா் கீழே குதித்தபோது ரயில் சற்று மெதுவாக சென்றதால் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்படவில்லை.

பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற ஆடவர் தப்பிவிட்டார். அவரைக் காவல்துறையினர் தேடுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்