தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இரு குழந்தைகள் பெற்றபின் 'ஆணாக' மாறி கணவரின் தங்கையோடு குடித்தனம்

2 mins read
082a1991-188b-4f08-9010-d220987c732a
தன் நாத்துணையாள் சோனி தேவியை மணந்துகொண்டு வாழ்ந்து வந்த சூரஜ் குமார் என்ற சுக்லா தேவி. படம்: இந்திய ஊடகம் -

பாட்னா: திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயானபின், கணவரின் தங்கையை மணந்துகொண்டு வாழ்ந்து வருகிறார் ஒரு பெண்.

இப்போது, தனது வாழ்க்கைத்துணையைத் தன் மாமனாரும் மாமியாரும் கடத்திக் கொண்டுபோய்விட்டதாக அப்பெண் புகார் அளித்துள்ளதால், காவல்துறையினர் என்ன செய்வதெனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இந்தியாவின் பீகார் மாநிலம், சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரமோத் தாசுக்கும் சுக்லா தேவி பெண்ணுக்கும் பத்தாண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது.

அதன்பின் அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்துவிட்ட நிலையில், இப்போது சுக்லா தேவியும் பிரமோத்தின் 18 வயது தங்கை சோனி தேவியும் கணவன் - மனைவிபோல் வாழ்ந்து வருகின்றனர்.

"நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். அதனால் திருமணம் செய்துகொண்டோம்," என்று செய்தியாளர்களிடம் சுக்லா தேவி சொன்னார்.

"காதல் இருக்கும்வரை நாங்களும் சேர்ந்திருப்போம். திருமணத்திற்குப் பிறகு நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்," என்றார் அவர். அவர்களது உறவில் சுக்லா தேவியின் கணவர் பிரமோத்திற்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்பது இன்னும் வியப்பான செய்தி.

"என் மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சிதான்," என்றார் அவர்.

திருமணத்திற்குப் பிறகு சுக்லா தேவி தன் பெயரை சூரஜ் குமார் என்று மாற்றிக்கொண்டதாக அவரது குடும்ப வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன், சோனி தேவி தன்னைக் கணவராக நினைக்க வேண்டும் என்பதற்காக, அவர் தனது தலைமுடியை ஆண்போல வெட்டிக்கொண்டு, ஆண்களுக்கான உடைகளையும் அணிந்து வருகிறாராம்.

சில காணொளிகளைப் பார்த்தபின் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும் திட்டமிட்ட அவர், பின்னர் அச்சமடைந்து அதனைக் கைவிட்டுவிட்டாராம்.

இவ்விவகாரத்தால் தங்களுக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிட்டதாகக் கருதிய பிரமோத்தின் பெற்றோர், வலுக்கட்டாயமாகத் தங்களது மகளை இழுத்துச் சென்றுவிட்டனர்.

இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் முறையான விசாரணை செய்தால் மட்டுமே உண்மை வெளிவரும் என்று காவல்துறைத் தரப்பு தெரிவித்துள்ளது.