பெங்களூரு: அமெரிக்காவிலிருந்து ஏர் இந்தியா விமானத்தின்மூலம் இந்தியா சென்ற தனது பயணப்பெட்டியை விமானத்தில் ஏற்றவே இல்லை என்று பெண் பயணி ஒருவர் சாடியிருக்கிறார்.
அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ள பூஜா கேத்தைல் என்ற அப்பெண், தமக்கு நேர்ந்த அந்த அனுபவம் குறித்து ஜூலை 8ஆம் தேதி எக்ஸ் ஊடகம் வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை மையத்தைக் கிட்டத்தட்ட 40 முறை தொடர்புகொண்ட பிறகே அவர்கள் பதிலளித்ததாகவும் பூஜா குறைகூறினார்.
ஜூலை 9ஆம் தேதி பெங்களூரில் நடைபெறும் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து நேரடி ஏர் இந்தியா விமானம் மூலம் பெங்களூரு சென்றார் பூஜா. ஆனால், அவரது பயணப்பெட்டி வரவே இல்லை.
“36 மணி நேரமாகிவிட்டது. எனது பெட்டி எப்போது கிடைக்கும் என்பது இன்னும் தெரியவில்லை. 40 முறை தொடர்புகொண்ட பிறகே தொலைபேசியையே எடுத்தனர். நாளை திருமணத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால், என்னிடம் எந்த உடையும் இல்லை,” என்று ‘எக்ஸ்’ பதிவு வாயிலாக பூஜா தமது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, பூஜாவின் பயணப்பெட்டியை மீட்க உதவியாக, உரிய விவரங்களை அளிக்கும்படி பூஜாவிடம் கேட்டுள்ளது ஏர் இந்தியா.
இதனிடையே, ஏர் இந்தியா விமானப் பயணத்தின்போது தங்களுக்கு நேர்ந்த இத்தகைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, இணையவாசிகள் பலரும் அந்நிறுவனத்தைச் சாடியுள்ளனர்.
ஐந்து நாள்களுக்குப்பின் தனது பயணப்பை கிடைத்ததாகக் குறிப்பிட்டு, “விதிவிலக்காக இப்படி நடப்பதில்லை. இது வழக்கமாகிவிட்டது. கேலிக்கூத்து!” என்று ‘எக்ஸ்’ ஊடகப் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“நாள்தோறும் இப்படி நடப்பதுபோல் தெரிகிறது. சென்ற வாரம் என் குடும்பத்தினரும் சான் ஃபிரான்சிஸ்கோ - பெங்களூரு விமானத்தில் பயணம் செய்தனர். தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்ததால் பல நாள்களுக்குப் பிறகு பயணப்பைகள் வந்தன. நேரடி விமானம் என்பதால்தான் அதில் செல்கின்றனர். ஆனால், அது வசதியாக இல்லாமல் தொந்தரவாகப் போய்விட்டது,” என்று இன்னொருவர் பதிவிட்டுள்ளார்.
பயணப்பை தொலைந்துபோவது இந்தியாவில் ‘வாடிக்கையாகிவிட்டதாக’ மேலும் பலர் குறிப்பிட்டுள்ளனர்.