தேநீர் கேட்ட கணவருக்குக் ‘கத்தரி’குத்து!

1 mins read
860291c2-c982-44c6-84ba-7a61d0430148
மாதிரிப்படம்: - ஊடகம்

லக்னோ: ஒரு குவளை தேநீர் கேட்டதற்காக பெண் ஒருவர் தன் கணவரின் கண்ணில் கத்தரிக்கோலால் குத்திய சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது.

பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அங்கிட். அவருக்கு மூவாண்டுகளுக்குமுன் திருமணம் நடந்தது.

ஆயினும், சில மாதங்களிலேயே குடும்ப விவகாரம் காரணமாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், அங்கித் தன்னை அடித்து உதைப்பதாக அவருடைய மனைவி அண்மையில் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதற்கு மூன்று நாள்களுக்குப் பிறகு, தனக்குத் தேநீர் போட்டுத் தருமாறு தன் மனைவியிடம் அங்கித் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த அப்பெண், கத்தரிக்கோலால் அங்கித்தின் கண்ணில் குத்தினார்.

அங்கித்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவருடைய உறவினர்கள், அங்கித்தின் கண்ணிலிருந்து ரத்தம் சொட்டியதைக் கண்டனர். உடனடியாக அதுபற்றிக் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குக் காவல்துறை வருமுன், அங்கித்தின் மனைவி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

காவல்துறை உடனடியாக அங்கித்தை மீட்டு, அருகிலிருந்த சமூக சுகாதார நிலையத்தில் சேர்த்தது. பின்னர் அவர் மீரட் நகருக்குச் சென்று சிகிச்சை பெறுமாறு பரிந்துரைக்கப்பட்டார்.

தப்பியோடிய அங்கித்தின் மனைவியைப் பிடிக்க காவல்துறை சிறப்புக் குழுக்களை அமைத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்