ஹத்ராஸ்: உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த ஒரு பெண், தனது நாத்தனாரின் திருமணத்திற்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருந்த ஏறக்குறைய ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடியதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) தெரிவித்தது.
அக்ரம் என்கிற கலுவா தனது சகோதரிக்கு நவம்பர் 11ஆம் தேதி திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில், ஏறக்குறைய ரூ.50 லட்சம் மதிப்புள்ள நெக்லஸ், வளையல்கள், சங்கிலிகள், மோதிரங்கள் உள்ளிட்ட தங்க நகைகளை ஹத்ராஸில் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
இந்த நகைகள் அக்டோபர் 23ஆம் தேதி இரவு வீட்டிலிருந்து காணாமல் போயின.
இதையறிந்து அதிர்ந்து போன அக்ரம், இதுகுறித்து ஹத்ராஸ் கேட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மாவட்ட காவல் ஆய்வாளர் சிரஞ்சீவ் நாத் சின்ஹா விசாரணைக்கு உத்தரவிட்டார்.
விசாரணையில், அக்ரமின் மனைவிதான் அந்த நகைகளைத் திருடியது என்பது அம்பலமானது.
அக்ரமின் மனைவிக்கு தனது கணவரின் சகோதரியான நாத்தனாருடன் சுமுகமான உறவு இல்லை என்றும், அந்த நகைகளை நாத்தனாருக்குக் கொடுப்பதை அவர் விரும்பவில்லை என்றும் தெரியவந்தது. இதனால், நகைகளைத் திருடி தனது பெற்றோர் வீட்டிற்கு அவர் அனுப்பியுள்ளார். அக்ரம் மனைவியிடம் இதுபற்றிக் கேட்டபோது, அவர் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மீட்கப்பட்ட நகைகளை காவல்துறை அந்தக் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

