தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேருந்துப் பயணத்தின்போது அத்துமீறிய ஆடவரை நையப்புடைத்த வீரமங்கை

1 mins read
55f6afd9-4f8a-450a-a34b-d73ff5ef363a
பலமுறை எச்சரித்தும் கேளாததால் பளார் பளார் என ஆடவரின் கன்னத்தில் அறைந்த பெண். காணொளிப்படம் -

கேலி செய்தல், பாலியல் சீண்டல், பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகள் அன்றாடம் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்களாக இருந்தாலும் சில வேளைகளில் அவர்கள் பதிலடி கொடுக்கத் தயங்குவதில்லை.

அத்தகையதொரு சம்பவம் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. மாண்டியா நகரில் உள்ளூர்ப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த ஒரு பெண்ணை ஆடவர் ஒருவர் கேலிசெய்ததோடு, அவரைத் தகாத முறையில் தொடவும் முயன்றார். அப்பெண் பலமுறை எச்சரித்தும் அந்த ஆடவர் தமது செய்கையை நிறுத்தவில்லை.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண் ஒருகட்டத்தில் பொங்கி எழுந்து, அந்த ஆடவரது சட்டையின் கழுத்துப்பட்டியைப் பிடித்தபடி, கன்னத்தில் பலமுறை அறைந்து, அவருக்குப் பாடம் புகட்டினார்.

இதில் வேதனை என்னவெனில், பேருந்தில் மேலும் சிலர் இருந்தும், ஒருவரும் அப்பெண்ணுக்கு உதவ முன்வரவில்லை என்பதுதான்.

ஆயினும், இச்சம்பவத்தை ஒருவர் காணொளியாகப் பதிவுசெய்து சமூக ஊடகத்தில் வெளியிட, அப்பெண்ணின் துணிச்சலை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.