நொய்டா: அரசாங்க அதிகாரிகள் போல் நடித்தும் ஆள்மாறாட்டம் செய்தும் மோசடி செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. இது போன்ற மோசடிச் சம்பவங்களில் பலர் சிக்கி லட்சக்கணக்கான வாழ்நாள் சேமிப்பை இழந்து வரும் நிலை உருவாகிக் கொண்டுள்ளது.
இதுபோன்ற மோசடியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண் ரூ.84 லட்சத்தை மோசடிப் பேர்வழிகளிடம் பறிகொடுத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், ராம் சிங், அக்ஷய் குமார் மற்றும் நரேந்திர சிங் சவுகான் என்கிற மூன்று பேரை காவல்துறை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதுபோன்று, பலரிடம் அவர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி பணம் பறித்துள்ளது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் அக்ஷய் குமார் ஒரு வங்கி ஊழியர் என்பதும், ராம் சிங் அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள், அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இணையம் வழி, தனி மனித ரகசிய தரவுகளைப் பெற்று அதன் மூலம் அவர்களை அச்சுறுத்திப் பணம் பறிப்பதே இவர்கள் வேலை என்று தெரியவந்துள்ளது. மேலும், நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்களை வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தது என மிரட்டி, அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவின் காவல்துறை ஆய்வாளர் ரஞ்சித் சிங் இது குறித்துக் கூறுகையில், “கைது செய்யப்பட்டவர்கள் பல மோசடி வழக்குகளில் தொடர்புடையவர்கள். அவர்களுக்கு நெருக்கமான கூட்டாளிகளில் ஒருவரான உமேஷ் மகாஜன் கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
விசாரணைக்குப் பின் அவர்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.