பாட்னா: தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால் கணவரைக் கைவிட்ட பெண், கடனை வசூலிப்பதற்காகத் தம் வீட்டிற்கு அடிக்கடி வந்துசென்ற ஆடவரை மணந்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பீகார் மாநிலம், ஜமுய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நகுல் சர்மா. அவருக்கும் இந்திர குமாரி என்ற பெண்ணுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
மது அருந்தும் பழக்கம் உடையவரான நகுல், மது அருந்திவிட்டு வந்து தன் மனைவியைத் துன்புறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
தன் கணவரின் துன்புறுத்தலால் உடலளவிலும் மனத்தளவிலும் பெரிதும் துவண்டுபோன இந்திரா, அதிலிருந்து விடுதலைபெற வித்தியாசமான, அதே சமயம் அதிர்ச்சி அளிக்கத்தக்க ஒரு வழிமுறையைக் கையாண்டார்.
நிதி நிறுவனத்தில் வேலைசெய்யும் பவன் குமார் யாதவ் என்ற ஆடவர், கடனை வசூலிப்பதற்காக அடிக்கடி இந்திராவின் வீட்டிற்கு வந்துசென்றுள்ளார். அதனால் பவனுக்கும் இந்திராவிற்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மாறியது.
ஐந்து மாதங்களாக இருவரும் ரகசியமாகக் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், இம்மாதம் 4ஆம் தேதி இருவரும் விமானம் மூலம் மேற்கு வங்க மாநிலத்திலுள்ள இந்திராவின் உறவினர் வீட்டிற்குச் சென்றனர்.
சில நாள்களுக்குப் பின் மீண்டும் ஜமுய் திரும்பிய அவர்கள், பிப்ரவரி 11ஆம் தேதி அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அந்நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர். அதுகுறித்த காணொளி இணையத்தில் பகிரப்பட, வேகமாகப் பரவியது.
அவர்களின் திருமணத்தை பவன் வீட்டார் ஏற்றுக்கொண்டனர். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத இந்திராவின் வீட்டார், பவன்மீது காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி பவனும் இந்திராவும் காவல்துறையிடம் தஞ்சமடைந்துள்ளனர். இந்திராவின் உறவினர்களால் தங்களுக்கு பாதிப்பு நேரலாம் என்றும் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகின்றனர்.

