புதுடெல்லி: 2024ல் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், வாக்களித்த வாக்காளர்களில் மகளிரே அதிகம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தலில், மொத்த பெண் வாக்காளர்களில் 65.78 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர். மொத்த ஆண் வாக்காளர்களில் 65.55 விழுக்காட்டினரே வாக்களித்துள்ளனர்.
தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளியியல் தரவுகளின்படி, மக்களவைத் தோ்தலில் மொத்தம் 64.64 கோடி போ் (66.1 விழுக்காட்டினர்) வாக்குகளைச் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய தோ்தல் நடைமுறையின் அடித்தளமாக இருக்கும் பொது மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்காக தாமாக முன்வந்து இத்தரவுகளை வெளியிட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.
அஸ்ஸாமில் உள்ள துப்ரி மக்களவைத் தொகுதியில் நாட்டிலேயே அதிகபட்சமாக 92.3 விழுக்காடு வாக்குகளும், ஜம்மு- காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் மிகக் குறைந்தபட்சமாக 38.7 விழுக்காடு வாக்குகளும் பதிவாகின.
எனினும், 2019 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் 14.4 விழுக்காடு வாக்குகளே பதிவான நிலையில், இது சிறிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. நாடு முழுவதும் 11 தொகுதிகளில் 50 விழுக்காட்டுக்கும் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையத்தின் புள்ளியியல் தரவுகள் தெரிவிக்கின்றன.