புவனேஸ்வர்: இரவுநேரப் பணியில் பெண்கள் வேலைசெய்ய இந்தியாவின் ஒடிசா மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அதே நேரத்தில், அதற்கு எழுத்துவழி ஒப்புதல் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், கடைகள், பிற வணிக நிறுவனங்களில் இரவு நேரத்தில் வேலை செய்ய பெண்களை அனுமதிப்பது தொடர்பில் மாநிலத் தொழிலாளர், ஊழியர் காப்புறுதித் துறை விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இரவுப் பணியின்போது குறைந்தது மூன்று பெண்களாவது இருக்க வேண்டும். அவர்களை வேலையிடத்திற்கு அழைத்துவரவும் வேலை முடிந்தபின் அவர்கள் தங்கள் தங்குமிடத்திற்குத் திரும்பச் செல்லவும் தடங்காட்டி (ஜிபிஎஸ்) வசதியுடன் கூடிய போக்குவரத்து வசதி இருக்க வேண்டும்.
எந்த ஒரு நிறுவனத்திலும் ஊழியராகவும் வேறு எக்காரணத்திற்காகவும் இளம்பெண்களை இரவு நேரத்தில் வேலைசெய்ய அனுமதிக்கக்கூடாது.
“இரவு நேரத்தில் பெண்கள் வேலை செய்யும் பணியிடங்களுக்கு அருகே கழிப்பறை, குடிநீர், கண்காணிப்புப் படக்கருவி, மின்விளக்கு போன்ற வசதிகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்க வேண்டும்,” என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் பணிக்குச் செல்ல பெண்களுக்கு அனுமதி வழங்கியிருப்பதன்மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
“மத்திய அரசின் அறிவுறுத்தல்களைப் பெற்ற பிறகே பெண்கள் இரவு நேரத்தில் வேலை செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளோம். இரவுநேரப் பணிக்குச் செல்ல விரும்பும் பெண்கள், அதன் தொடர்பில் எழுத்துவழி ஒப்புதலை அளிக்க வேண்டியது கட்டாயம்,” என்று ஒடிசா தொழிலாளர்துறை அமைச்சர் கணேஷ் ராம் சிங்குந்தியா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஒடிசாவை ஆளும் பாஜக அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு பிஜு ஜனதா களம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
“இரவுநேரப் பணிக்குச் செல்ல விரும்பும் பெண்கள் தாங்களே உறுதிமொழி அளிக்க வேண்டும். அதாவது, அவர்களை அவர்களே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதையே இது குறிக்கிறது. இப்படிச் சொல்வதன்மூலம், அரசாங்கம் தனது பொறுப்பைத் தட்டிக் கழிக்க முயல்கிறது,” என்று பிஜு ஜனதா தளக் கட்சியின் தலைவர் பிரமீளா மல்லிக் சாடியுள்ளார்.