ராய்ப்பூர்: இந்தியாவில் தேசிய அளவில் ஒவ்வோர் 1,000 ஆண்களுக்கும் 943 பெண்கள் உள்ளனர்; சத்தீஸ்கர் மாநிலத்தில் அதற்கும் அதிகமாக ஒவ்வோர் 1,000 ஆண்களுக்கும் 991 பெண்கள் இருப்பது 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் தெரிய வந்தது.
அதேபோல், சத்தீஸ்கரில் அதிக பெண்கள் அரசியலிலும் ஈடுபடுவதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், அந்த மாநிலத்தில் பெண்கள் முன்னணி அரசியல் பொறுப்புகளையோ நீதித் துறைப் பொறுப்புகளையோ வகித்ததில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர், 25 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக உருவெடுத்தது. அந்தக் காலகட்டத்தில் பல்வேறு முன்னணி அரசு அதிகாரிகள், தலைமை நீதிபதிகள் சத்தீஸ்கரைச் சேர்ந்தவர்களாக இருந்து வருகின்றனர்.
அதேவேளை, அந்த மாநிலத்தைச் சேர்ந்த எந்தப் பெண்ணும் ஆக மூத்தப் பொறுப்புகளை வகித்ததில்லை. இது, இதர சில அரசுப் பொறுப்புகளுக்கும் பொருந்தும்.
எனினும், சத்தீஸ்கர் சட்டமன்றத்தில்தான் ஆக அதிக விகிதத்தில் பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களில் 21.11 விழுக்காட்டினர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

