கைநிறைய பணம், பதவிக்கு முக்கியத்துவம் தரும் பெண்கள்: ஆய்வு

2 mins read
57234f88-421b-405e-b5ea-58508c8160c9
தனக்குத் துணையாக வரப்போகும் ஆண்கள் ஆண்டிற்கு ரூ.30 லட்சம் சம்பாதிக்கவேண்டும் என்றும் அரசாங்க வேலையில் இருப்பவர்களையே மணம்புரிய விரும்புவதாகவும் பெண்கள் கூறியுள்ளனர். படம்: இணையம் -

திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்கள் தங்களது வாழ்க்கைத் துணையாக வரப்போகிறவர் கைநிறைய சம்பாதிக்கவேண்டும், கௌரவ மான பதவி அல்லது வேலையில் இருக்கவேண்டும் என்று விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டு வருகிறது Shaadi.com என்ற இந்திய மேட்ரிமோனியல் இணையத்தளம்.

அண்மையில் இத்தளத்தின் சார்பில் 2.5 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டு, விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

திருமணத்திற்குத் தயாராகும் ஆணும் பெண்ணும் தங்களின் வாழ்க்கைத் துணையை எந்த அளவுகோலின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர் என்பது குறித்த விவரம் சேகரித்துள்ளது.

இதில் கலந்துகொண்ட பெண்களில் பெரும்பாலானோர், தனக்குத் துணையாக வரப்போகும் ஆண்கள் ஆண்டிற்கு ரூ.30 லட்சம் சம்பாதிக்கவேண்டும் என்றும் அரசாங்க வேலையில் இருப்பவர் களையே மணம் புரிய விரும்புவதாகக் கூறியுள்ளனர்.

அதேபோல், பெரும்பாலான ஆண்கள், வேலைக்குச் செல்லும் பெண்களையே விரும்புவதாகவும் சட்டம், விமானம், கட்டடக்கலை உள்ளிட்ட துறை சார்ந்த வேலையில் இருந்தால் மிகவும் நல்லது என கருதுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதர பணிகள் என்றால் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை விரும்புவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதிகம் விரும்பப்படாத வேலையாக விவசாயம் இருப்பதாகவும் ஆய்வு கூறுகிறது.

ஆய்வுத் தகவலின்படி, ஆண், பெண் இருபாலாருமே திருமணத்திற்குத் தயாராகும் வயதாக 26 முதல் 29 வயது வரை குறிப்பிட்டு உள்ளதாகவும் தனக்கான சரியான துணையைத் தேர்வு செய்வதற்கு இன்னும் சில காலங்கள் எடுத்தாலும் அதற்காகக் காத்திருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு ரூ.4 லட்சம் சம்பாதிக்கும் பெண்களைக் குறைந்தளவு ஆண்களே விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆய்வின் ஒட்டுமொத்த தகவலின்படி, ஒரு பட்டத்தையாவது மணமக்கள் பெற்றிருப்பது முக்கியம், பொருளியல் ரீதியாக யாரையும் சாராமல் தன் சுய சம்பாத்தியத்தில் வாழும் தன்மை, அரசாங்க வேலையில் இருப்பது, லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பது ஆகியன மண வாழ்க் கைக்கு உகந்த தன்மைகளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.