சமமாக நடத்தப்பட்டால் ஆண்களைவிட பெண்கள் அதிகம் சாதிப்பார்கள்: ராஜ்நாத் சிங்

2 mins read
1e676f80-b354-44c3-bea1-1639a9f05cdf
குஜராத் மாநிலத்தில் 11 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பெண்கள் மேம்பாட்டு மையம். பிரதமர் மோடி கடந்த 2022ஆம் ஆண்டு இதற்கான அடிக்கல்லை நாட்டினார். - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

அகமதாபாத்: சரிசம வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் பெண்கள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்று தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள தரம்பூரில் ஸ்ரீமத் ராஜ்சந்திர சர்வமங்கள பெண்கள் மேம்பாட்டு மையத்தை சனிக்கிழமை திறந்து வைத்தபோது அவர் அந்தக் கருத்தை வெளிப்படுத்தினார்.

அந்த மையத்திற்கான அடிக்கல்லை கடந்த 2022ஆம் ஆண்டு பிரதமர் மோடி நாட்டி இருந்தார். தற்போது அது கட்டப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது.

ஏறத்தாழ 11 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்தப் பெண்கள் உன்னத நிலையம் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் அவர்களின் திறனை மேம்படுத்தவும் தேவையான உதவிகளைச் செய்யும்.

முழுமையாக கிராமப்புறப் பெண்களாலேயே நிர்வகிக்கப்படும் அந்த மையம், பெண்கள் தொழில் தொடங்க ஊக்குவிப்பதுடன், பெண்களின் தலைமைத்துவ வளா்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்கும் என திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

மேலும் அவர் பேசும்போது, “பெண்களுக்குச் சரிசம வாய்ப்பு தரப்பட்டபோது அவர்கள் ஆண்களைக் காட்டிலும் திறன்களை வெளிப்படுத்தி சாதித்து உள்ளனர்,” என்று தெரிவித்த அவர் அதற்குச் சில உதாரணங்களையும் அவர் எடுத்துக் காட்டினார்.

“சமூகரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் பெண்களுக்குத் தேவைப்படும் அதிகாரத்தை வழங்க புதிய மையம் பாடுபடும்.

“இந்த மையத்தில் பெண்களால் தயாரிக்கப்படும் பொருள்கள் உலகச் சந்தையை அடையும்போது பிரதமர் மோடியின் தன்னிறைவு இந்தியா என்னும் முன்னெடுப்பு பற்றிய கனவை நனவாக்க அது உதவும்.

“இங்கு பணியாற்றும் பெண்கள் அதிகாரமிக்கவர்களாகவும், பொருளாதார ரீதியாக தற்சார்பு உடையவர்களாகவும் மாறுவார்கள். அத்துடன் அவர்கள் தங்களுக்கு விருப்பமான ஆன்மிக சிந்தனைகளில் ஈடுபடவும் இந்த மையம் போதிய நேரத்தையும் வாய்ப்பையும் வழங்கும் என்று நம்புகிறேன்.

“ஸ்ரீமத் ராம்சந்திரஜி தரம்பூருக்கு வந்து நடப்பு ஆண்டுடன் 125 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதேபோல், ஆர்எஸ்எஸ் இயக்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.

“இந்த இரண்டுமே இந்தியாவின் பண்பாடு, ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மையைப் பறைசாற்றுகின்றன,” என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

ஆண்டுதோறும் 15,000க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களின் திறன்களை மேம்படுத்த இந்தப் புதிய மையம் இலக்கு கொண்டுள்ளது.

அத்துடன், நாடு முழுவதும் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள், மையத்தின் பங்காளித்துவ அமைப்புகளின் வழி திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என அது அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்