புதுடெல்லி: இந்தியாவின் 77வது குடியரசு தின விழா அந்நாட்டுத் தலைநகர் புதுடெல்லி உட்பட அனைத்து மாநிலங்களிலும் திங்கட்கிழமை (ஜனவரி 26) கொண்டாடப்பட்டது.
புதுடெல்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெற்ற விழாவிற்குக் குதிரைப் படை சூழ சாரட் வாகனத்தில் அந்நாட்டு அதிபர் திரௌபதி முர்மு வந்திறங்கினார்.
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய மன்றத்தின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அவ்விழாவில் கலந்துகொண்டனர்.
அவர்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
துணை அதிபர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள், தலைமை தளபதி அனில் சவுகான், முப்படை தளபதிகள் ஆகியோர் பங்கேற்ற அவ்விழாவில், 21 குண்டுகள் முழங்க திருவாட்டி முர்மு, இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றப்பட்டது. அப்போது அந்நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து பல்வேறு மாநிலங்களின் இசைக் கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெற்றன.
பின்னர் ராணுவம், கடற்படை, விமானப் படை, மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டப் படை ஆகியோர் நடத்திய அணிவகுப்பு நடந்தது. பின்னர், மத்திய அரசின் 13 துறைகள், 17 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் பங்கேற்றன.
அதில் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினர் பயன்படுத்திய பிரதான ஆயுத அமைப்பின் மாதிரி வடிவங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, குடியரசு தினத்தை முன்னிட்டு அதிபர் முர்மு ஜனவரி 25ஆம் தேதி உரை நிகழ்த்தினார்.
அப்போது, ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கை அடைய பெண்களின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதற்கு பல்வேறு துறைகளில் அவர்கள் புரிந்துவரும் சாதனைகளே சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன என அவர் கூறினார்.
மேலும், உலகளவில் நிச்சயமற்ற தன்மை நிலவும் நிலையில், இந்தியாவின் பொருளியல் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதாகவும் உலகின் மூன்றாவது பெரிய பொருளியலைக் கொண்ட நாடு என்ற இலக்கை நோக்கி இந்தியா செல்வதாகவும் அதிபர் முர்மு தெரிவித்தார்.

