புதுடெல்லி: இந்தியாவின் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா, வாக்கெடுப்பில் போதிய ஆதரவு கிடைக்காததால் தோல்வி அடைந்தது.
கடந்த 2023ஆம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 விழுக்காடு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை 850ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டது.
அதற்காக, தொகுதி மறுவரையறை மசோதா, அரசியலமைப்பு 131வது திருத்த மசோதா மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை மத்திய அரசு வியாழக்கிழமை (ஏப்ரல் 16) மக்களவையில் தாக்கல் செய்தது.
மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அம்சம் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மசோதாக்களுக்கும் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணிக் கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதா மீதான விவாதம் மக்களவையில் வியாழக்கிழமை நள்ளிரவு 1 மணி வரை நீடித்தது. வெள்ளிக்கிழமை காலை விவாதம் தொடர்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று விளக்கம் அளித்த பின்னர் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மொத்தம் 528 எம்பிக்கள் பங்கேற்றதில், மசோதாவுக்கு ஆதரவாக 298 பேரும் எதிராக 230 பேரும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற மூன்றில் இரு பங்கு ஆதரவு தேவை. அதாவது, மக்களவையில் 352 எம்பிக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே மசோதாவை நிறைவேற்ற முடியும்.
தொடர்புடைய செய்திகள்
போதுமான ஆதரவைப் பெற முடியாததால் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா தோல்வி அடைந்தது. மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மட்டுமே வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மற்ற இரு மசோதாக்கள் மீதும் வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

