பெங்களூரு: கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) காலை நடைபெற்ற பெருநடையில் அரசியல் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், தொழில்முனைவோர், கல்வியாளர்கள் என பலதுறைகளிலும் சிறந்து விளங்கும் பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பெண்ணுரிமையை வலியுறுத்தும் முழக்கப் பதாகைகளை அவர்களில் பெரும்பாலானோர் ஏந்திச் சென்றனர்.
குழந்தைத் திருமணம், போதைப்பொருள் தொடர்பான வன்முறை, ஆணாதிக்கக் கட்டுப்பாடு, பாலினப் பாகுபாடு, பொருளியல் ரீதியாக பெண்களை ஒதுக்குதல், சாதியக் கொடுமை போன்றவற்றை வலியுறுத்தும் முழக்கங்களை பெண்கள் எழுப்பினர்.
பெண்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் கர்நாடகப் பெண்கள் நல ஆணையத்தின் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதும் அந்தப் பெண்கள் முன்னெடுத்து முழங்கிய முக்கியக் கோரிக்கையாகும்.
கர்நாடகப் பெண்கள்நல ஆணையம் (KSCW) என்பது மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான அநீதிகள், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் உரிமை மீறல்களை விசாரித்து, அவர்களுக்குப் பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் நலனை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு சட்டபூர்வ அமைப்பாகும்.
இதற்கிடையே, அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள பதிவில், “கல்வியிலிருந்து துவங்கி அத்தனை துறைகளிலும் இன்று தனி முத்திரை பதித்துக்கொண்டிருக்கும் பெண்கள் உத்வேகத்தை அளித்து வருகிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

