மகளிரணித் தலைவர் பதவி இல்லை: வானதி சீனிவாசன் விளக்கம்

மகளிரணித் தலைவர் பதவி இல்லை: வானதி சீனிவாசன் விளக்கம்

2 mins read
a3e97777-b3eb-48f5-a839-05ceb861c570
பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கட்சிப் பணி தொடரும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் பதவியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக சத்தீஸ்கரைச் சோ்ந்த ரூப் குமாரி சௌத்ரி புதிய தேசிய மகளிர் அணி தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூரைப் பூர்வீகமாகக் கொண்ட வானதி சீனிவாசன், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய மகளிர் அணித் தலைவராக பதவி வகித்து வந்தார்.

அந்தப் பதவியை ஏற்று ஆறு ஆண்டுகளான நிலையில், திங்கட்கிழமை (ஆகஸ்ட் 17) அதிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டார்.

அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது, கட்சியின் வழக்கமான நடைமுறைதான் என்றும் அதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

“எனது உழைப்பையும் பணிகளையும் கட்சித் தலைமை நிச்சயம் பயன்படுத்தும். அந்த வகையில் வேறு பொறுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறேன். பொறுப்பு இல்லை என்றாலும் எனது கட்சிப் பணி தொய்வின்றித் தொடரும்,” என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை பாஜக நிர்வாகிகள் கூறும்போது, ‘‘பாஜகவில் ஒருவருக்கு கட்சிப் பதவி மூன்று ஆண்டுகள், அதிகபட்சம் ஆறு ஆண்டுகள்தான். அந்தக் காலக்கெடு முடிந்ததால் தேசியப் பொறுப்பில் இருந்து வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டார்,” என்றனர்.

பாஜகவில் அமைப்பு ரீதியாக கட்சியைப் பலப்படுத்தும் வகையில் புதிய தேசிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்களைத் தேசியத் தலைவா் நிதின் நபின் நியமித்துள்ளதாக அக்கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாஜக தேசியச் செயலாளர்களாகத் தமிழகத்தைச் சோ்ந்த டாக்டா் எம். வெங்கடேசன் உள்பட 16 போ் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசியப் பொருளாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் இணைப் பொருளாளராக ராஜேஷ் மங்கலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்