பாட்னா: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள காடுகளில் குறைந்தது 20 பேரைக் கொன்றதாகக் கூறப்படும் யானையைத் தேடிப் பிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மேலும் 15 பேரை யானை காயப்படுத்தியதாக கிராமவாசிகளும் அதிகாரிகளும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) தெரிவித்தனர்.
தனியாகத் திரியும் அந்த ஆண் யானை கடந்த ஒன்பது நாள்களாக அது தனக்கு முன் இருப்பவற்றை அனைத்தையும் அடித்து நொறுக்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக மேற்கு சிங்பும் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமவாசிகள் பீதியில் உள்ளனர்.
யானை தாக்கி மாண்டோரில் சிறுவர்களும் முதியவர்களும் அடங்குவர்.
யானைப் பாகன் ஒருவரும் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆளில்லா வானூர்திகளின் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதிகளில் யானையை அதிகாரிகள் தேடுகின்றனர்.
யானைக்குப் பயந்து 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பண்ணைகளிலிருந்து வெளியேறிவிட்டனர். எஞ்சியிருப்போர் இரவு நேரத்தில் தங்கள் வீட்டைப் பூட்டி வீட்டுக்குள்ளேயே உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த யானைக்கு மதம் பிடித்திருக்கக்கூடும் என்றும் அது தற்போது அடங்கி யானைக் கூட்டத்துடன் சேர்ந்திருக்கும் என்றும் முன்னாள் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

