வீட்டிலிருந்தே பணி: தனியார் நிறுவனங்களுக்கு ஹரியானா அரசு வலியுறுத்து

வீட்டிலிருந்தே பணி: தனியார் நிறுவனங்களுக்கு ஹரியானா அரசு வலியுறுத்து

கோப்புப்படம்: இந்தியா டுடே

14 Jun 2026 - 7:07 pm

2 mins read

சண்டிகர்: போக்குவரத்து நெரிசலையும் எரிபொருள் மற்றும் மின்சாரப் பயன்பாட்டையும் குறைக்கும் நோக்கில், தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் வசதியையும் நீக்குப்போக்கான அலுவலக நேரத்தையும் வழங்குமாறு இந்தியாவின் ஹரியானா மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

மத்திய கிழக்குப் போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விநியோகத் தொடர் சிக்கலையும் எரிபொருள் விலையேற்றத்தையும் கருத்தில்கொண்டு இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்தியாவின் முக்கியப் பெருநிறுவன மையங்களில் ஒன்றாகத் திகழும் குருகிராமில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் முன்னணி நிறுவனங்களுக்கான ‘ஃபார்ச்சூன் 500’ பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில் பல குருகிராம் நகரில் அமைந்துள்ளன. டெல்லியிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் அந்நகருக்குள் நாள்தோறும் ஏறக்குறைய 500,000 வாகனங்கள் வருகின்றன. இதனால், அங்குக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனையடுத்து, ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த ‘நாஸ்காம்’, ‘சிஐஐ’ போன்ற தொழில் கூட்டமைப்புகளுடன் இணைந்து செயல்படுமாறு தொழில்துறைக்கு ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் துறையினர் இதனை வரவேற்றுள்ளனர். கொவிட்-19 தொற்றுக் காலத்தில் இந்த நடைமுறை வெற்றியடைந்ததால் உற்பத்தித்திறன் பாதிக்கப்படாது என்றும் பயணச்செலவுகள் குறையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, அரசாங்கத் துறைகளிலும் பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில், வரும் செப்டம்பர் மாதம் வரை பெட்ரோலியச் செலவினங்களை 20 விழுக்காடு குறைக்கவும் வாகனப் பயன்பாட்டை மாதந்தோறும் 10 விழுக்காடு குறைக்கவும் நிதித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், முக்கியத் தலைவர்களுக்கான (விஐபி) பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கவும் அரசுத் துறைகளில் மின்சார வாகனங்கள் அல்லாத பிற வாகனங்களை வாங்குவதற்குத் தற்காலிகத் தடை விதிக்கவும் ஹரியானா மாநிலத் தலைமைச் செயலாளர் அனுராக் ரஸ்தோகி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்