மும்பை: அண்மைய தினங்களாக இந்திய விமானங்களுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வந்த நிலையில், புரளியைக் கிளப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இந்திய உள்துறை, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சுகள் உறுதிபூண்டுள்ளன.
ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, விஸ்தாரா உள்ளிட்ட பல இந்திய விமானங்களுக்கு இந்த வாரம் 12க்கும் அதிகமான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இந்தப் போக்கு தமக்கு மிகுந்த கவலையளிப்பதாகக் கூறிய இந்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “நிலவரத்தை நான் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறேன். எமது சட்ட அமலாக்க அமைப்புகள் அனைத்துச் சம்பவங்களையும் தீவிரமாக விசாரித்து வருகின்றன.
“மூன்று விமானங்களைக் குறிவைத்து விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்களுக்குக் காரணமானவர் எனச் சந்தேகிக்கப்படும் பதின்மவயது இளையர் ஒருவரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. விமானச் சேவைகளுக்கு இடையூறு விளைவித்த மற்ற அனைவரும் அடையாளம் காணப்பட்டு அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இவற்றின் தொடர்பில் திங்கட்கிழமை (அக்டோபர் 14) முதல் மும்பையில் நான்கு ‘முதல் தகவல் அறிக்கைகள்’ (எஃப்ஐஆர்) பதிவுசெய்யப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர், விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அக்டோபர் 24ஆம் தேதி வரை அவர் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டிருப்பார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றொருவர், அதே சத்தீஸ்கர் மாநிலத்தில் கடை நடத்திவரும் 34 வயது ஆடவர்.
ஃபஸ்லுதீன் நிர்பன் எனும் அந்தக் கடை உரிமையாளருக்குச் சொந்தமான எக்ஸ் கணக்கிற்குள் ஊடுருவி, அதன்மூலம் இண்டிகோ, ஏர் இந்தியா விமானங்களுக்கு மூன்று வெடிகுண்டு மிரட்டல்களை அந்த 17 வயது இளையர் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கடை உரிமையாளருடன் நிதித் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரைப் பழிவாங்க அந்த இளையர் இச்செயலில் இறங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து புதன்கிழமை மும்பைக்குச் சென்றுகொண்டிருந்த விஸ்தாரா விமானத்துக்கு சமூக ஊடகம் வழி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் வியாழக்கிழமை (அக்டோபர் 17) தெரிவித்தது.
அந்த விமானம் திட்டமிட்டபடி மும்பையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது.
முன்னதாக, மதுரையிலிருந்து செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) சிங்கப்பூர் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் இரு எஃப்-15 வகை போர் விமானங்களின் உதவியுடன், சாங்கி விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கிய அந்த விமானத்தில் சோதனை நடத்தியதில், வெடிகுண்டு எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என சிங்கப்பூர் காவல்துறை புதன்கிழமை தெரிவித்திருந்தது.