தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

64 கோடி மக்களின் முடிவு என்ன? கருத்துக் கணிப்புகள் உண்மையாகுமா?

2 mins read
b436a6e8-e66c-402a-a0ce-3d8186e3b06a
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரும் மற்ற இரு துணைத் தேர்தல் ஆணையர்களும் திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சிங்கப்பூர் நேரப்படி இன்று (ஜூன் 4) காலை 10.30 மணியளவில் தொடங்கியது.

சிங்கப்பூர் நேரப்படி காலை 11.30 (இந்திய நேரப்படி காலை 9) மணிக்கு முன்னணி நிலவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 64 கோடி பேர் புதிய அரசாங்கத்தையும் பிரதமரையும் தேர்வு செய்ய இம்முறை தேர்தலில் வாக்களித்துள்ளனர்.

இரு நாள்களுக்கு முன்பு வெளியான கருத்துக் கணிப்புகளின்படி பாஜக பல்வேறு மாநிலங்களில் முன்னிலையில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அவை முழுமையாக எண்ணி முடிக்கப்படாவிட்டாலும் கூட, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்புகள் உண்மையாக வேண்டும் என பாஜகவினரும், பொய்யாக வேண்டும் என இண்டியா கூட்டணிக் கட்சியினரும் விரும்புகின்றனர்.

முன்னதாக, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இம்முறை ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் மொத்தம் 543 இடங்கள் உள்ளன. இத்தொகுதிகளில் இம்முறை மொத்தம் 64.20 கோடி வாக்காளர்கள் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளனர். மொத்தம் 8,000க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கினர்.

குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடு்த்து மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

தேர்தல் வாக்குப்பதிவுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் தற்போதுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணிக்கு ஆதரவாக உள்ளன.

எனவே, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் பதவிக்கு வரும் என அவரது ஆதரவாளர்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

மறுபக்கம் காங்கிரஸ் கட்சி தலைமையிலான இண்டியா கூட்டணி கருத்துக்கணிப்புகளை மீறி பெரும் வெற்றியைப் பதிவு செய்யும் என்று எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை அறிந்துகொள்ள இந்தியக் குடிமக்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கிறது.

குறிப்புச் சொற்கள்