பீகார் தேர்தலில் உலக வங்கியின் ரூ.14,000 கோடி: பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

2 mins read
cf68edde-53e6-4126-99ee-30df38fea1de
ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர். - படம்: ஊடகம்

பாட்னா: மாநில வளர்ச்சிக்காக உலக வங்கி வழங்கிய நிதியை முதல்வர் நிதிஷ் குமார் பீகார் தேர்தலுக்குப் பயன்படுத்தியதாக ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.

நடந்து முடிந்த பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202ல் என்டிஏ வெற்றி பெற்றது. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியால் வெறும் 35 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.

தேர்தல் வியூக ஆலோசகரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது.

அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பிரசாந்த் கிஷோர், ஆளும்தரப்பு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

அவர் கூறுகையில், “ஜூன் மாதம் முதல் தேர்தல் அறிவிக்கப்படும் வரை, 40,000 கோடி ரூபாய் நிதிஷ் குமார் அரசால் செலவிடப்பட்டுள்ளது. மக்களின் வாக்குகளை அரசுப் பணத்தின் மூலம் வாங்க இந்தச் செலவு செய்யப்பட்டது.

“இதற்குமுன் இல்லாத அளவுக்கு இது மிகப் பெரியளவில் நடந்தது. உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 14,000 கோடி ரூபாய் கடன் பீகார் மாநிலத்தின் சலுகைகள் மற்றும் இலவசங்களுக்காகத் திசை திருப்பப்பட்டுள்ளது.

“பீகாரில் தேர்தல் நடக்கும்போதே 1.25 கோடிப் பெண்களுக்குத் தலா 10,000 ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

“தேர்தல் நடத்தை விதிகள் இருந்தபோதிலும், வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பு வரை மக்களுக்குப் பணம் கிடைத்துக்கொண்டே இருந்தது. நாட்டிலேயே இதுபோல நடப்பது இதுதான் முதல்முறை.

“பொருளியல் ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்களின் வாக்குகளைப் பெற இதுவே போதுமானதாக இருந்தது. இதுபோல அரசு நிதியைச் செலவிட்டு என்டிஏ கூட்டணி மக்கள் வாக்குகளை வாங்கியது. ஒருவேளை அதைச் செய்யாமல் இருந்திருந்தால் என்டிஏ கூட்டணி அழிந்திருக்கும்,” என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்