லிவர்பூல்: உலகக் குத்துச்சண்டைப் போட்டிகளில் மகளிர் 57 கிலோகிராம் எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை ஜாஸ்மின் லம்போரியா தங்கம் வென்றிருக்கிறார்.
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் போட்டிகள் நடைபெறுகின்றன. இறுதிப் போட்டியில் அருமையாக ஆடிய ஜாஸ்மின் நான்கிற்கு ஒன்று எனும் ஆட்டக் கணக்கில் போலந்தின் ஸெர்மெட்டா ஜூலியாவை வீழ்த்தித் தங்கத்தைக் கைப்பற்றினார். சென்ற ஆண்டு (2024) பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார் ஜாஸ்மின்.
போட்டியின்போது ஆதரவாளர்களின் ஆரவாரத்திற்கு இடையே சரமாரியாகக் குத்தி எதிராளியைத் திக்குமுக்காடச் செய்தார் ஜாஸ்மின். தனது உயரத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், வெற்றிக்கனியைத் தட்டிப் பறித்தார்.
“இந்த உணர்வை விவரிக்க இயலாது. உலக வெற்றியாளரானதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒலிம்பிக்கில் தோல்வியுற்ற பிறகு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எனது திறன்களை மேம்படுத்திக்கொண்டேன். இந்த முடிவு ஓராண்டு தொடர்ந்து உழைத்ததற்குக் கிடைத்த பரிசு,” என்றார் ஜாஸ்மின்.
80 கிலோகிராமுக்கும் மேற்பட்ட எடைப் பிரிவில், இந்தியாவின் நுப்பூர் ஷியோரன் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் போலந்தின் அகத்தா காக்ஸ்மார்ஸ்காவிடம் தோல்விகண்டார்.
80 கிலோகிராம் எடைப் பிரிவில் இந்தியாவின் பூஜா ராணிக்கு வெண்கலம் கிடைத்தது.