உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் காலமானார்

2 mins read
3cb21d3c-46a5-4a3c-8a40-3f24d1a6eb65
ஷியாம் பெனகல், இந்தியாவின் மாற்று சினிமாவைத் தொடங்கிய, மிகவும் மதிக்கப்படும் திரைப்பட இயக்குநர்களில் ஒருவர். - படம்: இணையம்

மும்பை: உலகப் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல் மறைவுக்கு இந்திய திரையுலகp பிரபலங்களும் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குநர் ஷியாம் பெனகல் திங்கட்கிழமை (டிசம்பர் 23) காலமானார். அவருக்கு வயது 90. சிறுநீரக பாதிப்பு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனைவி நீரா பெனகல், மகள் பியா ஆகியோரை அவர் விட்டுச்சென்றுள்ளார். அவரது இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஷியாம் பெனகல் 1970களில் சமூக உணர்வுடன் கூடிய இந்தியத் திரைப்படத்தின் புதிய அலையை முன்னெடுத்த பெருமைக்குரியவர்.

அவரது படைப்புகளான அங்குர் (1974), நிஷாந்த் (1975), மந்தன் (1976), பூமிகா (1977) ஆகியவை சமூக யதார்த்தங்களை எடுத்துரைத்தன. இந்திய சினிமாவின் திருப்புமுனையாக இந்தியாவின் பிளவுகளை ஆராய்ந்த ‘அங்கூர்’ படம் அமைந்தது.

இவர் அங்கூர், பூமிகா, ஜூனுன், அரோஹன், மந்தன் உள்ளிட்ட ஏழு படங்களுக்காக தேசிய விருதைப் பெற்றவர்.

ஷியாம் பெனகல் (இடது) தனது உந்துசக்தியாகக் கருதிய சத்யஜித் ரேயுடன் (வலது).
ஷியாம் பெனகல் (இடது) தனது உந்துசக்தியாகக் கருதிய சத்யஜித் ரேயுடன் (வலது). - படம்: இணையம்

புனே ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியுட் ஆஃப் இந்தியாவின் தலைவராக இருந்தார். ‘எ சைல்ட் ஆஃப் தி ஸ்ட்ரீட்ஸ்’, ‘ஜவஹர்லால் நேரு’, ‘சத்யஜித் ரே’ உள்ளிட்ட இவரது ஆவணப்படங்கள் பரவலான பாராட்டுகளைப் பெற்றன. 2023ல், பங்ளாதேஷ் சுதந்திர இயக்கத்தின் தலைவரான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றை பெனகல் இயக்கினார்.

பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட இந்தியாவின் உயரிய விருதுகளுடன் உலக விருதுகளையும் பெற்றவர்.

சுமிதா பட்டேல், ஷபனா அஸ்மியுடன் ஷியாம் பெனகல், 1976 கேன் திரைப்பட விழாவில். இந்திய திரையுலகின் சிறந்த நட்சத்திரங்கள் சிலரை உருவாக்கி வளர்த்தவர் பெனகல்.
சுமிதா பட்டேல், ஷபனா அஸ்மியுடன் ஷியாம் பெனகல், 1976 கேன் திரைப்பட விழாவில். இந்திய திரையுலகின் சிறந்த நட்சத்திரங்கள் சிலரை உருவாக்கி வளர்த்தவர் பெனகல். - படம்: இணையம்

ஜவஹர்லால் நேருவின் ‘தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ நூலை அடிப்படையாகக் கொண்ட 53 பாகங்களைக் கொண்ட பாரத் ஏக் கோஜ் (1988) என்ற தொலைக்காட்சித் தொடர் பெனகலின் சிறப்புகளில் ஒன்று. பண்டைய காலத்திலிருந்து நவீனத்துவம் வரையிலான இந்திய வரலாற்றைக் கூறும் தொடர் அது.

1934 டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் பிறந்த பெனகல், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பொருளியல் பட்டம் பெற்று ஹைதராபாத் திரைப்பட சங்கத்தை நிறுவினார். 12 வயதில் கேமராவை பயன்படுத்த தொடங்கினார். சினிமாவில் முத்திரை பதிப்பதற்கு முன்னர் 900க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கள், விளம்பரங்களை இயக்கியுள்ளார்.

கலைத்துறையில் அவரது தொலைநோக்கிற்காக மட்டுமின்றி, இந்திய சினிமாவைத் தொடர்ந்து வடிவமைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்களை உருவாக்கி வளர்த்ததிலும் அவருக்குள்ள பங்களிப்பிற்காக பெனகல் நினைவுகூரப்படுகிறார்.

குறிப்புச் சொற்கள்