கோலாலம்பூர்: தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது தன் பிள்ளைகளுக்கு முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கல்வி உபகாரச் சம்பளம் வழங்க முன்வந்தார் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
திரு மன்மோகன் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 26) தமது 92ஆவது வயதில் காலமானார். அவருக்கு உலகத் தலைவர்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவ்வகையில், தம்மிடம் காட்டிய கனிவன்பைச் சுட்டி, திரு மன்மோகனை ‘உண்மையான நண்பர்’ எனக் குறிப்பிட்டுள்ளார் திரு அன்வார்.
அப்போது, அவரது உதவியைத் தான் ஏற்க மறுத்தபோதும், திரு மன்மோகனின் அச்செயல் அவரது ‘வியத்தகு மனிதநேயத்தையும் தாராள மனப்பான்மையையும்’ வெளிப்படுத்துவதாக அமைந்தது என்று திரு அன்வார் கூறியுள்ளார்.
“அத்தகைய பெருந்தன்மைமிக்க செயல்களே அவரை வரையறுக்கும். அவை என்றென்றும் என் நெஞ்சில் பதிந்திருக்கும்,” என்று ஃபேஸ்புக் பதிவு வழியாகப் பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவை பெரிதும் ஆதரித்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டு நாடுகளும் அடைந்த முன்னேற்றத்திற்கும் வெற்றிக்கும் அவர் மிக முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். அவரது தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்தியா- அமெரிக்கா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம்தான் வருங்காலத்தில் இரு நாடுகளிடையே சிறந்த முதலீடு தொடர்பான உறவுகளை உருவாக்கக் காரணமாக இருந்தது,” என்று குறிப்பிட்டுள்ள பிளிங்கன், இந்தியப் பொருளியலை விரைவாக மேம்படுத்தக் காரணமாக இருந்த மன்மோகன் சிங், தமது பொருளியல் சீர்திருத்தங்களுக்காக என்றும் அறியப்படுவார் எனக் கூறியுள்ளார்.
தனது ஆக நம்பிக்கைக்குரிய மகனை இந்தியா இழந்துவிட்டதாக, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்ஸாய் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
ஆப்கானிஸ்தான் மக்களின் உறுதியான நண்பராக மன்மோகன் சிங் திகழ்ந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத், தங்கள் நாட்டின் சிறந்த நண்பராக மன்மோகன் சிங் விளங்கினார் எனத் தெரிவித்துள்ளார். அவர் தன் தந்தையைப் போன்றவர் என்றும் நஷீத் கூறியிருக்கிறார்.