பெங்களூரு: அனைத்துலக ஜனநாயக நாளை முன்னிட்டு, 2,500 கிலோமீட்டர் நீளத்திற்கு மனிதச் சங்கிலி அமைத்து, இந்தியாவின் கர்நாடக மாநிலம் உலக சாதனை படைத்துள்ளது.
சமத்துவம், ஒற்றுமை, சகோதரத்துவம், பங்காளித்துவம் ஆகியவற்றை வலியுறுத்திய இந்த உலகின் மிக நீளமான மனிதச் சங்கிலி நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) இடம்பெற்றது.
கர்நாடக மாநிலத்தின் 31 மாவட்டங்களிலும் இடம்பெற்ற இந்தச் சாதனை நிகழ்வில் மொத்தம் 2.5 மில்லியன் பேர் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
தலைநகர் பெங்களூரில் சட்டமன்றம் முன்பாக அமைக்கப்பட்ட மனிதச் சங்கிலியில் முதல்வர் சித்தராமையா, மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
இந்தச் சாதனை நிகழ்வைப் பார்வையிட்டு, உறுதிசெய்வதற்காக லண்டனிலிருந்து ஒரு குழுவினர் வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக வரலாற்றிலேயே ஆக நீளமான இந்த மனிதச் சங்கிலி நிகழ்வில் பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
அத்துடன், அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனிடையே, மேடையில் இருந்த முதல்வர் சித்தராமையாவை நோக்கி திடீரென ஓர் ஆடவர் வேகமாக ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
எனினும், முதல்வரின் பாதுகாவலர்கள் அந்த ஆடவரைத் தடுத்து நிறுத்தினர்.
அவரது பெயர் மகாதேவ நாயக், 24, என்றும் முதல்வருக்குச் சால்வை அணிவிக்கவே தான் மேடையை நோக்கிச் சென்றதாக அவர் கூறினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தின்போது முதல்வருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் மகாதேவ நாயக் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை தெரிவித்தது.

