உலகப் பெருஞ்செல்வந்தர்கள் பட்டியலில் பின்னடைவைச் சந்தித்துள்ளார் இந்தியாவின் ஆகப் பெரும்பணக்காரரான ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி.
கடன் அதிகரிப்பின் காரணமாக அவரது சொத்து மதிப்பு $15 பில்லியன் அமெரிக்க டாலர் (S$20.1) குறைந்ததால், ‘ஹுருன் உலகப் பணக்காரர்கள் பட்டியல் 2025’ல் முதல் பத்து இடங்களுக்குள் ஒருவராக அவரால் வரமுடியவில்லை.
அதே நேரத்தில், ஆசியாவின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை முகேஷ் அம்பானி மீண்டும் கைப்பற்றினார். அவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர் (ரூ.8.6 லட்சம் கோடி).
கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 13 விழுக்காடு கூடி, ரூ.8.4 லட்சம் கோடியானது. இதன்மூலம், முதல் மூன்று இந்தியப் பெருஞ்செல்வந்தர்களில் ஒருவராக அவர் இடம்பெற்றுள்ளார்.
ஹெச்சிஎல் குழுமத்தின் ரோஷ்னி நாடார் உலகின் பணக்காரப் பத்துப் பெண்களுக்குள் ஒருவராக முன்னேறியுள்ளார். முதல் பத்து இடங்களுக்குள் வந்த முதல் இந்தியப் பெண் அவர்தான்.
அப்பட்டியலில் ரோஷ்னி ஐந்தாம் இடத்தில் நீடிக்கிறார். அவரது மொத்தச் சொத்து மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடி. அண்மையில் ரோஷ்னியின் தந்தையார் ஷிவ் நாடார் ஹெச்சிஎல் நிறுவனத்தின் 47% பங்குகளை அவரது பெயருக்கு மாற்றினார்.
மின்சாரக் கார்களைத் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் $420 பில்லியன் டாலர் சொத்துடன் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 266 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.
ஒட்டுமொத்தத்தில், உலகில் 3,442 பேர் ஒரு பில்லியன் டாலருக்குமேல் சொத்து வைத்துள்ளதாக ஹுருன் அறிக்கை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவைப் பொறுத்தமட்டில், மேலும் 13 பேர் அப்பட்டியலில் இணைந்துள்ளனர். இப்போது, 284 இந்தியர்களுக்கு ஒரு பில்லியன் டாலருக்குமேல் சொத்துகள் உள்ளன.
உலகின் முதல் நூறு பெரும்பணக்காரர்களில் எழுவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.