ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் கத்ரா நகருக்கும் ஸ்ரீநகருக்கும் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (ஜூன் 6) கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
அந்த ரயிலானது, செனாப் ஆற்றின்மீது கட்டப்பட்டுள்ள உலகின் ஆக உயரமான ரயில் பாலத்தின்மீதும், நாட்டின் முதலாவது கம்பிவடப் பாலமான அன்ஜி பாலத்தின்மீதும், காரி - சம்பர் இடையிலான சுரங்கப்பாதை வழியாகவும் செல்லும்.
கரடுமுரடான இமயமலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த 272 கிலோமீட்டர் நீள, முழுதும் மின்மயமாக்கப்பட்ட ரயில் தடத்தில் 36 சுரங்கப்பாதைகளும் 943 பாலங்களும் அமைந்துள்ளன. இந்த ரயில் பாதை ரூ.43,780 கோடி (S$6.57 பில்லியன்) செலவில் அமைக்கப்பட்டுள்ளது
“மிகச் சிறப்பான கட்டடக் கலையோடு, ஜம்முவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையிலான தொடர்பையும் செனாப் ரயில் பாலம் மேம்படுத்தும்,” என்று வியாழக்கிழமை எக்ஸ் தளம் வழியாகத் திரு மோடி கூறியிருந்தார்.
முன்னதாக, கத்ரா-ஸ்ரீநகர் இடையே ரயில் சேவை தொடங்கப்படும் நாள், ஜம்மு - காஷ்மீரிலுள்ள தம் சகோதர சகோதரிகளுக்குச் சிறப்பான நாளாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
கடல்மட்டத்திலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செனாப் ரயில் பாலம் 1.3 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
இந்தத் திட்டம் ஆன்மிகச் சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வடமுனையில் அமைந்துள்ள காஷ்மீரில் தொடர்புகளை மேம்படுத்த இத்திட்டம் இலக்கு கொண்டுள்ளது. பல்லாண்டுகளாக அங்கு நடந்துவரும் சண்டையாலும் அதனால் நிலவும் அமைதியின்மையாலும் காஷ்மீரில் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள இயலவில்லை எனக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுப்பயணிகள் 26 பேரைப் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அதனைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே அண்மையில் நடந்த மோதலுக்குப் பிறகு பிரதமர் மோடி காஷ்மீருக்குச் சென்றது இதுவே முதன்முறை.
இதனிடையே, “கடந்த 30 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கூட்டுமுயற்சியின் விளைவு இது. அடுத்தடுத்த பிரதமர்களின் சீரிய பணிகளால் இத்திட்டங்கள் நனவாகியுள்ளன,” என்று எதிர்க்கட்சியான காங்கிரசின் பேச்சாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் ஊடகத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.