‘இந்தியாவின் விண்வெளி அறிவியல் சாதனைகள் உலகைக் கவர்ந்துள்ளன’

2 mins read
5c53cc3e-e0d0-47d0-b562-92f031ccf02f
இந்தியாவின் விண்வெளிச் சாதனைகளைப் பாராட்டியுள்ளார் அந்நாட்டின் ஓய்வுபெற்ற விண்வெளி விரர் ராக்கே‌ஷ் ‌ஷர்மா. - படம்: ஸ்டேட்ஸ்மன் / இணையம்

கோவை: விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகள் உலகைக் கவர்ந்துள்ளன என்று அந்நாட்டின் ஓய்வுபெற்ற விண்வெளி வீரர் பிரிவு தளபதியான ராக்கே‌ஷ் ‌ஷர்மா கூறியுள்ளார்.

இத்துறையில் இந்தியாவின் சாதனைகளை அவர் பாராட்டிப் பேசினார். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா, குறைந்த செலவில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக திரு ராக்கே‌ஷ் ‌ஷர்மா குறிப்பிட்டார்.

“இந்தியா சாதித்திருப்பது உலகைப் பெரிதும் கவர்ந்துள்ளது என்பது எனது கருத்து. சந்திராயன், மங்கல்யான் ஆகிய இரண்டிலும் இந்தியா முதல் முயற்சியிலேயே வெற்றிகண்டது மிகச் சிறப்பு. இப்போது ககன்யான் திட்டமும் தயாராகிக்கொண்டிருக்கிறது,” என்றார் அவர்.

“எனது காலத்தில் ர‌ஷ்யாவும் அமெரிக்காவும் மட்டும்தான் விண்வெளித் துறையில் பல முயற்சிகளை மேற்கொண்டன. அவை இரண்டும் தங்களுக்கிடையே போட்டியில் ஈடுபட்டன. அதேவேளை, நாங்கள் அமைதியாக எங்கள் திட்டங்களிலும் துணைக்கோள் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வந்தோம். நமது பொருளியலுக்கு அவை கைகொடுத்ததே அதற்குக் காரணம். அந்த வகையில் கவனம் உள்நாட்டை மையமாகக் கொண்டிருந்தது. அவர்களின் கவனமோ நாடுகளுக்கிடையிலான அரசியல் சூழலைச் சார்ந்திருந்தது. அப்போதிருந்து விண்வெளித் துறையில் படைக்கப்படும் சாதனைகள் எவ்வாறு சாதாரண மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தோம். அதைத்தான் செய்தோம்,” என்று திரு ராக்கே‌ஷ் ‌ஷர்மா விவரித்தார்.

இந்தியாவின் விண்வெளி வீரர்(கள்) அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டு நாசா எனும் அமெரிக்க விண்வெளி நிர்வாகத்தின்கீழ் பயிற்சி பெறுவது குறித்தும் பேசிய திரு ராக்கே‌ஷ் ‌ஷர்மா, “எங்களின் விண்வெளி வீரர்கள் இருவர் அங்குச் சென்றுள்ளனர். அது நல்லதே. அனைத்துலக விண்வெளி நிலையத்தைப் பார்த்துக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். நமது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்க அவர்களின் திறன்கள் தேவைப்படும்,” என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்தான் அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்துத் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார் என்றும் அவரைப் பற்றி ஊடகங்கள் அச்சம் பரப்புகின்றன என்றும் அவர் சுட்டினார்.

குறிப்புச் சொற்கள்