அகமதாபாத்: அண்மையில் இந்தியா மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையின்போது கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் அரசு நிதி அளித்துள்ளதாக இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டி உள்ளார்.
வியாழக்கிழமை குஜராத் மாநிலம் புஜ் விமானப்படை தளத்தில் வீரர்கள் இடையே பேசிய அவர், பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதி அளித்துள்ளது என்றார்.
பயங்கரவாதி மசூத் அசாருக்கு பாகிஸ்தான் நிதி கொடுத்துள்ளது என்றும் இவ்வாறு பாகிஸ்தான் அரசு உதவி செய்து வருவது கண்டிக்கத்தக்கது என்றும் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் வரை இந்தியா ஓயாது என்று குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பயங்கரவாதிகள் கைகளில் சிக்கும் அபாயம் உள்ளதாக எச்சரித்தார்.
மேலும், அனைத்துலக நாணய நிதியம் கொடுத்த நிதியை பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வழங்கி உள்ளதாகவும் எனவேதான் நிதி கொடுப்பதை பரிசீலனை செய்யுமாறு இந்தியா வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.
“ராணுவ வீரர்களின் கண்காணிப்பின்கீழ் இந்திய எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது. இந்த நடவடிக்கையின் முழு வடிவத்தை உலகம் விரைவில் பார்க்கும்.
“இந்திய விமானப்படை தங்கள் வலிமையை மட்டுமல்ல, இப்போது இந்தியாவின் தொழில்நுட்பமும் மாறிவிட்டது என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளோம்,” என்றார் ராஜ்நாத் சிங்.