பீகார்: மகாபலிபுரத்தில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய சிவலிங்கம் பீகாரில் சனிக்கிழமை (ஜனவரி 17) வேத மந்திரங்கள் முழங்க நிறுவப்பட்டது.
பீகாரின் கிழக்கு சம்பாரன் மாவட்டம் கேசரியா நகரில் கட்டப்பட்டு வரும் விராட் ராமாயணக் கோயிலில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிவலிங்கம் 33 அடி உயரமும் 210 டன் எடையும் கொண்டது.
மாமல்லபுரம், பட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்களின் 10 ஆண்டு கால உழைப்பில் இச்சிவலிங்கம் உருவாகியுள்ளது. மாமல்லபுரத்திலிருந்து 96 சக்கரங்கள் கொண்ட லாரி மூலம் கிட்டத்தட்ட 47 நாட்கள் பயணத்துக்குப் பிறகு லிங்கம் கேசரியாவைச் சென்றடைந்தது. அந்தப் பயணத்தின் போது லாரி எங்கு நின்றாலும் லிங்கத்தைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியது.
ஹரித்வார், பிரயாக்ராஜ், கங்கோத்ரி, கைலாஷ் மானசரோவர், சோன்பூர் ஆகிய இடங்களில் இருந்து ஐந்து நதிகளின் நீர் சிவலிங்கத்தின் அபிஷேகத்துக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது.
‘சஹஸ்ரலிங்கம்’ என அழைக்கப்படும் இந்தச் சிவலிங்கத்தில் 1,008 சிறிய லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த லிங்கத்துக்கு நீர் அபிஷேகம் செய்தால் 1,008 சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
30 அடி உயரக் கோபுரத்தின் மீது நிறுவப்பட்டுள்ளதால், தரையில் இருந்து லிங்கத்தின் மொத்த உயரம் 60 அடிக்கும் மேல் இருக்கும். இரு மிகப் பெரிய பாரந்தூக்கிகளின் உதவியுடன் ஏறக்குறைய அரை மணி நேரத்தில் பொறியாளர்கள் குழுவினர் இதனை நிறுவினர்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் மஹாவீர் அறக்கட்டளையின் முன்னாள் செயலாளருமான மறைந்த ஆச்சார்யா குணால் கிஷோரின் கனவுத் திட்டமே விராட் ராமாயணக் கோயில். 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் வளாகத்தில், அவரது மகன் சயான் குணால் தற்போது சடங்கு சம்பிரதாயங்களுடன் சிவலிங்கத்தை நிறுவிச் செய்துள்ளார். அக்கோயில் 2,800 அடி நீளமும் 1,400 அடி அகலமும் கொண்டது. அயோத்திக்கு அடுத்தபடியாக இது மிக முக்கிய ஆன்மீகத் தலமாக மாறும் என்றும், இதன் மூலம் உள்ளூர் பகுதியில் விமான நிலையம், நெடுஞ்சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிவலிங்கம் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அப்பகுதிக்கு நேரில் சென்று கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். “இந்த பிரம்மாண்டத் திட்டம் ராமாயணச் சுற்றுலாவிற்குப் பெரிய பலத்தைச் சேர்க்கும்” என்று துணை முதலமைச்சர் விஜய் சின்ஹா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
கோயில் வளாகத்தில் சிவலிங்கம் நிறுவப்பட்டதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதியில் திரண்டதால் அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது.

