கோல்கத்தாவில் மோசமான தீ விபத்து; 1,200 கடைகள் சேதம்

2 mins read
d7500e26-79f0-4b88-9982-3f5b6445d89b
கிடர்பூர் சந்தையைச் சூழ்ந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பாளர்கள். - படம்: பிடிஐ

கோல்கத்தா: இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவின் கிடர்பூர் சந்தையில் திங்கட்கிழமை (ஜூன் 16) அதிகாலை ஏற்பட்ட தீ நூற்றுக்கணக்கான கடைகளைச் சாம்பலாக்கியது.

இரவு நேரம் என்பதால் உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டது.

பின்னிரவு 2.05 மணிக்குப் பற்றிய தீயானது நான்கு மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது. குறைந்தது 20 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

அந்த 150 ஆண்டுப் பழைமையான சந்தையில் 1,200க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையானதாக உள்ளூர்க் கடைக்காரர்கள் தெரிவித்தனர். ஆயினும், அதிகாரிகள் இன்னும் அதனை உறுதிப்படுத்தவில்லை.

எரிந்துபோன கூரைகள், சாம்பலான பொருள்களைச் சுட்டிக்காட்டி, “பேரிழப்பு!” என்றார் பெருந்துயரத்தில் ஆழ்ந்திருந்த வணிகர் ஒருவர்.

மின்கசிவு காரணமாகத் தீப்பற்றியிருக்கலாம் என்று ஐயப்படுவதாகத் தீயணைப்புத்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சாக்குப்பைகள், எண்ணெய் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் அருகிலுள்ள கிடங்குகளில் இருந்ததால் தீ கொழுந்துவிட்டு எரிந்ததாகக் கூறப்பட்டது.

அத்துடன், குறுகலான, நெரிசலான இடம் என்பதாலும் தீயை அணைக்கும் பணி எளிதாக இருக்கவில்லை.

இதனிடையே, தீயணைப்பு வண்டிகள் தாமதமாக வந்தன என்று உள்ளூர் வணிகர்கள் குற்றஞ்சாட்டினர்.

“உடனடியாகத் தகவல் அளித்தும் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகே தீயணைப்புப் படையினர் வந்தனர்,” என்று கடைக்காரர் ஒருவர் சொன்னார்.

மேலும், நீரழுத்தம் குறைவாக இருந்தது என்றும் பத்து நிமிடங்களில் நீர் இருப்பு தீர்ந்துபோனது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தீ விபத்து நேர்ந்த இடத்திற்குத் திங்கட்கிழமை காலையில் சென்ற மாநில தீயணைப்பு, அவசரகாலச் சேவைகள் துறை அமைச்சர் சுஜித் போசுக்கு எதிராகக் கடைக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்புச் சொற்கள்