புதுடெல்லி: வாழ்க்கையில் அனைத்தையும் திறந்த மனத்துடன் அணுக வேண்டும் என்றும் அப்போதுதான் இலக்கை அடைய முடியும் என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இரண்டு நாள் பயணமாக கேரளா சென்ற ராகுல், அங்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள இளையர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, தம்மிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் சுவாரசியமாகப் பதிலளித்தார்.
“அரசியலுக்கு வந்திருக்காவிட்டால் விண்வெளித் துறையில் தொழில்முனைவோராக இருந்திருப்பேன். ஆனால், பலரால் நான் அரசியல்வாதி என்று வரையறுக்கப்பட்டேன். உண்மையில் நான் வேறு சிலவற்றைச் செய்துகொண்டிருந்தேன்,” என்றார் ராகுல் காந்தி.
தனது தந்தை, தாத்தா ஆகிய இருவரும் விமானிகள் என்று குறிப்பிட்ட அவர், தானும் ஒரு விமானி என்றார்.
“ஒருவரை அரசியல்வாதி, தொழில்நுட்ப வல்லுநர், பொறியாளர் என்று அழைப்பது சுருக்கமான வரையறைகள் என்று கருதுகிறேன்.
“நாம் எல்லாவற்றையும் பற்றி ஆர்வமாக இருக்க வேண்டும். அனைத்து விஷயங்களிலும் புரிதல் இருப்பது அவசியம். எல்லாவற்றையும் திறந்த மனத்துடன் அணுகினால்தான் நமது இலக்குகளை அடைய முடியும்,” என்றார் ராகுல் காந்தி.
இதனிடையே, கேரளாவின் வர்க்கலா பகுதியில் உள்ள சிவகிரி மடத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ நாராயண குருவின் சமாதியைப் பார்வையிட்ட ராகுல் காந்தி, இடுக்கியில் உள்ள குட்டிக்கானத்தில் தேயிலைத் தோட்ட ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.

